பக்கம்:கனிச்சாறு 3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  35


பாடிக்கை கூப்பிப் பராவிப் புகழ்ந்து
பணிந்திரக்க
வேடிக்கை யன்று விடுதலை! வீழாத
வீர மிக்க
நாடிக்குள் விம்மும் நரம்பிற்குள் பாய்ந்திடும்
நல்லரத்தம்
கோடிக்கு நூற்றுவர்க் கோடினும் நாடு
கொளப் பெறுமே!

-1972


34  மதுரையில் விடுதலை ஊர்வலம்!

சென்று கொண்டிருந்தது, விடுதலை மாப்படை!
செவ்வரி படர்ந்தது நெடுங்கூர் விழிகளில்;
தின்று கொண்டிருந்தனர் பகையினை, வாயினால்;
தினவுநீர் ஊறித் தெறித்தது பேச்சிலே!
என்றுகண் டிருக்குமப் பாண்டியன் மாநகர் !
எதிர்ந்தவர் யாவரும் யாவரும் வியந்தனர்!
நின்றுகொண் டிருந்தனர் பகைவர்கள் விதிர்ப்புற;
நெட்டுயிர்ப் பெய்தினர் நீடுற நடுங்கியே!

'தமிழ்நிலம் தமிழருக் கே' என முழங்கினர்!
'தாய்நிலம் விடுதலை பெறு'கெனப் பிளிறினர்!
'தமிழ்மொழி அரியணை யாள் 'கென வீறினர்!
'தாழ்வுகள் அகல்'கெனத் தருக்கொடு கூறினர்!
இமிழ்கடல் வரைப்பினில் யாங்கணும் உறைந்திடும்
எந்தமிழ்த் தாயினர் யாவரும் இணை' கெனத்
துமிபட முழங்கியே தொன்னகர் மதுரையின்
தோரண வீதியில் ஊர்வலஞ் சென்றனர்!

சென்றுகொண் டிருந்தவல் லூர்திகள் நின்றன!
செருப்படை போல்வலஞ் சென்றவர்க் கண்டதும்
ஒன்றிரண் டொன்பது பத்தென நூறென
ஓரா யிரம்நடை பாதையர் ஒதுங்கியே
நின்றுகொண் டவர்சொலும் நெருப்புரை கேட்டனர்!
நெரிசல்கண் டோடிய பேர்பலர்! மற்றவர்
நின்றுகொண் டிருந்தவர் இருந்தவர் தாம்பிற
நினைவுகள் மறந்தவர் மறந்தவர் தாமரோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/64&oldid=1424554" இலிருந்து மீள்விக்கப்பட்டது