பக்கம்:கனிச்சாறு 3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி

36  விடுதலை வேண்டும்!


விடுதலை வேண்டும்! அதுமுதல் வேலை!
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை! (விடுதலை)

'கொடு'தலை என்றால், கொடுத்திடத் துடிக்கும்,
கொள்கை மறப்படை பகைஉயிர் குடிக்கும்!
'எடு'தலை என்றால், பகைதலை எடுக்கும்,
இலக்கம் கோடியென் றெண்ணிக்கை கொடுக்கும்! (விடுதலை)

காடுமே டெல்லாம் பசிக்க ஊண்தேடிக்
கண்ணீரில் மிதக்கின்ற தமிழர்கள் கோடி!
வாடுமே அவருளம்! துவண்டிடும் நாடி!
வற்றாத வளஞ்சேர்க்க வா,தமிழ் பாடி! (விடுதலை)

என்னென எண்ணினார், எந்தமிழ்த் திறத்தை?
எதிர்க்கின்ற காட்டவா, வழிவழி மறத்தை?
சொன்னாலும் சொல்லுவோம் குறள் சொல்லும் அறத்தை!
சூடேற விட்டாலோ காட்டுவோம் புறத்தை! (விடுதலை)

புலிபெற்ற பிள்ளைக்குப் பூனையா எதிரி?
புறப்பட்டு விட்டாலோ பகையோடும் சிதறி!
வலிபெற்ற நெஞ்சங்கள் துடிக்கவா பதறி?
மானமே உயிராகும், மற்றெல்லாம் உதிரி! (விடுதலை)

பெற்றோரை உற்றோரை பேணுவோம் நாளை!
பிள்ளைகள் மனைவியைப் பார்ப்போம்அக் காலை!
கற்றவர் கல்லாதார்க் கிது,அழைப் போலை!
காளையர் கன்னியர் நிமிர்த்துவீர் தோளை!
(விடுதலை)

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/67&oldid=1424557" இலிருந்து மீள்விக்கப்பட்டது