பக்கம்:கனிச்சாறு 3.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 


37  விடுதலை நாடுவாய்!


உலகம் உயிர்த்தது; நிலங்கள் விழித்தன;
ஒவ்வோ ரினமும் எழுந்தது! - அதன்
உரிமை முழக்கம் வானம் அதிர்ந்திட
ஊமையன் காதிலும் விழுந்தது!
நிலமும் விளைவும் மலையும் காடும்
நீரும் பொதுவே என்றனர்! - அவர்
நேர்மைக் குரலுக் கொப்பா தவரை
நீட்டிய வாளால் தின்றனர்!
புலமும் தூர்ந்திட உளமும் மயங்கிடப்
புலராத் தூக்கம் தூங்கினாய்! - அட
போக்கற் றவனே, தமிழா, நீதான்
புன்மை இழிவுகள் தாங்கினாய்!
குலமும் மதமும் உன்னைக் குலைத்தன!
குடும்பந் தனக்கிடர் இழைத்தனை! - ஒரு
கொள்கையு மில்லை; நோக்கமும் இல்லை!
கோடரிக் காம்பாய் உழைத்தனை!

மனமும் கெட்டாய்; குணமும் கெட்டாய்;
மதியுங் கெட்டாய் வடிவிலே! - தன்
மானம் இழந்தாய்; உரிமை இழந்தாய்;
மண்ணும் இழந்தாய் முடிவிலே!
தினவும் தோளும் வீரமும் விறலும்
தேர்ந்தனை தமிழா அந்நாளில்! - பிறர்
தின்னும் இலைக்கே காவல் நிற்கத்
தெருவில் திரிவாய் இந்நாளில்!
இனமும் காவாய் மொழியும் பேணாய்!
எச்சில் சோறுண் டுடுத்தனை! - உன்
இனமுன் னேற்றம் விழைவோர் தமையே
எவர்க்கோ காட்டிக் கொடுத்தனை!
நனவும் வருமோ? நாணமும் வருமோ?
நாளும் வருமோ அரசோச்ச? - இந்
நானிலம் எங்கும் தமிழர் புகழை
நான்கிரு திசையும் முரசோச்ச!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/68&oldid=1424558" இலிருந்து மீள்விக்கப்பட்டது