பக்கம்:கனிச்சாறு 3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 49


48  இந்தியப் புலத்தினில் புரட்சி மேகங்கள் !

புாட்சி மேகங்கள் இந்தியப் புலத்தினில்
திரட்சி யுற்றுத் தென்படு கின்றன!
மருட்சி யுற்ற அரசியல் மாண்புகள்
மிரட்சியால் மக்களை மேய்க்கப்பார்க் கின்றனர்!
புதுமை மின்னின! கருத்துகள் முழங்கின!
பொதுமை காணும் போக்குகள் மலிந்தன!
கிளர்ச்சி! கிளர்ச்சி! எங்கணும் கிளர்ச்சி!
தளர்ச்சியுற் றிருந்தவர் தணலாய்க் கிளம்பினர்!
வளர்ச்சி வேண்டி வகைசெயக் கோரினர்!
குளிர்ச்சி விட்டிடச் சூடு கிளர்ந்தது!
இலகும் இழிவுகள் இழப்புகள் நீங்கிட
உலக மாந்தர் கலகம் விளைத்தனர்!

பலமொழி! பலஇனம்! பலபண் பாடுகள்!
குலங்கள் கோடி! மதங்கள் பற்பல!
எத்தனை நாளைக்கு இணைந்து கிடந்திடும்?
செத்துக் கிடந்தவர் சீறி எழுந்தனர்!
ஒவ்வொரு தேசிய இனமும் உயிர்த்தது!
எவ்வொரு விளைவும் 'எல்லார்க்கும்' என்றது!

ஆண்ட இனத்தவர் அரண்டனர்! அழன்றனர்!
பூண்ட அதிகாரம் புதுக்கினர்! அடக்கினர்!
அடிகள்! உதைகள்! அழல்வாய்க் குண்டுகள் !
வெடிகள்! பிணங்கள்! வேடிக்கைத் தீர்ப்புகள்!

கொடிகள் விரிந்தன! கூட்டங்கள் நிறைந்தன!
இடிமுழக் கங்கள் இன்னும்கேட் கின்றன!
மேகப் புயல்கள் விண்விட் டிறங்கின!
வேகச் சீற்றம்! விடியலுக் கேங்கின!
புரட்சி மாமழை பொழிந்திடப் போகும்!
வறட்சி நீங்கிடும்! வரலாறு மாறுமே!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/78&oldid=1424569" இலிருந்து மீள்விக்கப்பட்டது