பக்கம்:கனிச்சாறு 4.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 கனிச்சாறு – நான்காம் தொகுதி


அதற்குக் கணியன் பலவாறாய்
அலசிப் பார்த்தே, “உன்மனைவி
இதற்கு முன்பே ஒருவனிடம்
ஈடு பாடாய் இருந்திருந்தாள்;
அதற்கும் கோள்கள் கரணியமாம்!
அவனுடன் ஓடிப் போயிருப்பாள்!
எதற்கும் காவல் நிலையத்தில்
இதனைச் சொல்லி முறையிடுவாய்!” 9

-என்றே கூறித் “தென்திசையில்
இருக்கும் ஊரில் இருந்திடலாம்!
இன்றே போய்ப்பார்” என்றானாம்!
இவனும் தேடித் திரிந்தானாம்!
அன்றோர் நாளில் அவன்மனைவி
அன்னை யுடனே திரும்பினாளாம்!
சென்றவள் நேரே தாயிடந்தான்
சென்றிருந் தாளென் றறிந்தானாம்! 10

வந்தது சினமும் கணியனின்மேல்!
வாழ்க்கை தவறினள் என்றன்றோ
இந்தக் கணியன் உரைத்திருந்தான்!
“என்றன் மனைவி சண்டையிட்டே
சொந்தத் தாயின் வீடன்றோ
சொகுசாய்ச் சென்று மீண்டுள்ளாள்!
எந்தப் படியாய்ச் சொன்னாய், நீ”
என்றே கேட்டுக் கொண்டிருந்தான்! 11

அவனை மெதுவாய் என்பக்கம்
அழைத்துக் கேட்டேன், “அப்பாநீ
அவளை மணந்தே எத்தனையாண்
டாயிற்” றென்றேன், “பத்தாண்டாய்
அவளோ டிருந்து வாழ்கின்றேன்”
என்றான், அவனும் பெருமையுடன்!
“அவளோ டித்தனை யாண்டிருந்தாய்!
அவளை உனக்குத் தெரியாதோ?” 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/103&oldid=1440732" இலிருந்து மீள்விக்கப்பட்டது