பக்கம்:கனிச்சாறு 4.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104  கனிச்சாறு - நான்காம் தொகுதி


மூக்கினை மணந்த
மணங்கள் எத்தனை!
மணங்களை எழுப்பும்
மலர்கள் எத்தனை?

நாக்கினைத் தழுவும்
சுவைகள் எத்தனை?
சுவைகளில் பொலிந்த
நலன்கள் எத்தனை?

தேக்கிய அறிவும்
திகழ்கின்ற இன்பமும்
திகழ்ந்த இன்பம்
தேய்கின்ற துன்பமும்

தாக்கிய உணர்வுகள்
தனித்தனி அறிவு!
தனித்தனி உணர்வையும்
தம்பியே, உணர்க!

உலகுஉன் னுடையது!
உற்ற இயற்கையும்
உற்ற இயற்கையால்
பெற்ற இன்பமும்

அலகிலா வகையன!
ஆர்வப் பார்வையால்-
அங்காந்த நெஞ்சால்-
அனைத்தையும் விழுங்குக!

இலகிடும் இன்பங்கள்
எத்தனை எத்தனை?
பித்தனைப் போல, நீ
பிரிந்துவா டாதே!

குலவிடு, அவற்றுடன்!
கூட்டுக உயிரை!
கொண்ட மகிழ்ச்சியைக்
கொடுக்கஅனை வர்க்குமே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/139&oldid=1440807" இலிருந்து மீள்விக்கப்பட்டது