பக்கம்:கனிச்சாறு 4.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110  கனிச்சாறு - நான்காம் தொகுதி


78

கல்வி நலன்கள் !


உண்மை உணர்வது கல்வி! - நம்
உயிர்க்கொளி சேர்ப்பது கல்வி!
திண்மை உளத்தினை ஊக்கி - வரும்
தீமை தவிர்ப்பது கல்வி!

அச்சத்தைக் கொல்வது கல்வி - உள
ஆற்றலை வளர்ப்பது கல்வி!
மெச்சத் தகுந்தநல் வாழ்வை - இங்கு
மேம்படச் செய்வது கல்வி!

நன்மை நினைப்பது கல்வி - மக்கள்
நலத்தை விளைப்பது கல்வி!
புன்மை நினைவுகள் யாவும் - உள்
பொசுங்க எரிப்பது கல்வி!

இளமையிற் கற்பது கல்வி - உண்மை
இன்பந் தருவது கல்வி!
வளமைக்கு வளமையைச் சேர்த்து - நம்
வலிமை மிகுப்பது கல்வி!

முதுமை இலாதது கல்வி வாழ்க்கை
முழுவதும் துய்ப்பது கல்வி!
பொதுமை உணர்வினைத் தந்து - நலம்
பொலிந்திடச் செய்வது கல்வி!

பொறுமை நிறைப்பது கல்வி - உளப்
பொறாமையைத் தீய்ப்பது கல்வி!
வறுமையும் பெருமையென் றெண்ணும் - மன
வளத்தை வளர்ப்பது கல்வி!

ஒழுக்கம் விளைப்பது கல்வி - நல்
உயர்வைக் கொடுப்பது கல்வி!
மழுக்கம் இலாதநல் லறிவை - இங்கு
மலர்ந்திடச் செய்வது கல்வி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/145&oldid=1440814" இலிருந்து மீள்விக்கப்பட்டது