பக்கம்:கனிச்சாறு 4.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  121


16. ஒழுங்கு.

அவரவர் போக்கி லறிவெனுந் துணையோ
டன்பெனுங் கைக்கோ லூன்றி,
தவறுகண் டஞ்சித், தண்ணுள மொன்றத்
தாழ்வுரை உயர்செயல் இயக்கி
எவரெவர் உயிர்க்கும் இன்னா விளையா
திலக்கினை எதிர்கொளுங் கணைபோல்
அவரவர் ஒழுகல் ஒழுங்கெனக் கூறி
அறநூல் சாற்றுதல் கண்டீர்! 17

17. தூய்மை.

தூய்மையின் தாய்மை வாய்மையே! அதனுள்
தோன்றிடும் பற்பல நினைவும்,
ஆயவை விளைக்குநல் அருஞ்சொல் லுரையும்
அதுநின் றெழும்புநல் வினையும்
ஏயுமச் செயலால் இயங்கிடு விளைவும்
இவற்றால் நிறையுமிவ் வுலகும்
வாய்மைக் குறுகள மாகுமிப் பாங்கே
வளியுல கொளிபெறும் வழியே! 18

18. அறிவு.

துரும்பினைக் கொண்டே தூண்பயன் காண்பார்,
தூண்மிடி துரும்பாய்க் கொள்வார்,
அரும்பினைக் கொய்யா தலர்தலை வேட்பார்,
அலர்ந்தது மதன்பயன் நுகர்வார்,
பெரும்பயன் நோக்கிப் பெறும்பயன் இழவார்,
பெறுவதுட் பெறற்குளம் நிறைவார்,
வரும்பிணி யுள்ளும் வாய்மைகை நெகிழார்,
வல்லறி வாளரென் போமே! 19

19. அன்பு.

பிறரழத் தாமழும் பேதமை அன்பு!
‘பிறர்’ முறை தகர்ந்ததே அன்பு!
உறவினும் பெரிதே! உலகினும் பரப்பே!
உயிர்பகுப் பிறந்ததே அன்பு;அஃ
தறமெனும் நறுஞ்செயற் கருந்தாய் ! அறமில்
ஆகாச் செயலுக் கெரிதீ!
மறமெனும் பெருஞ்செயற் குறுதுணை! அதுவே
மண்ணுல கியக்குமா வலியே! 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/156&oldid=1444183" இலிருந்து மீள்விக்கப்பட்டது