பக்கம்:கனிச்சாறு 4.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 135


88

நாம் தமிழரல்லர் !


பள்ளென்போம்; பறையென்போம் நாட்டாரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம்; முதலியென்போம்;
                                                 நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள்; நமைத் ‘தமிழர்’என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள்; தமிழ்நாட் டாரே!

-1959

 

89

நெறி காணீரே !



கல்லாலும் செம்பாலும் பண்ணிவைத்த
படிவத்தைக் ‘கடவுள்’ என்றே
நல்லாவின் பாலாலும் நெய்யாலும்
வழிபாடு நாளும் செய்தே
எல்லாரும் அவர்பெற்ற மாந்தரென்பீர்!
ஆனாலும் எண்ணற் றோரைச்
சொல்லாலும் மக்களெனச் சொல்லுகிலீர்;
தாழ்த்துகின்றீர்; நெறிகா ணீரே!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/170&oldid=1444204" இலிருந்து மீள்விக்கப்பட்டது