பக்கம்:கனிச்சாறு 4.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 கனிச்சாறு – நான்காம் தொகுதி


தக்கவே அவற்றைத் தரைமட்ட மாக்கி
எந்தமிழ் மக்கள் எழுச்சிபெற் றுய்ந்திடச்
செந்தமிழ் இலக்கியஞ் செய்க இளைஞனே!

கொடுமை சான்ற குலப்பிரி வினைகளை-
கெடுமை புகட்டும் சமயக் கீழ்மையை-
செல்வச் செருக்கினைச் செந்தமிழ்ச் சொற்களால்
கல்லி யெறிந்திடும் இலக்கியங் கழறுக!

வாழ்க்கை பொதுவெனும் வாழ்த்தினைப் பாடி
வீழ்க்கை யுற்றவர் விலாவலி வேறவும், 30
நொடிந்தவர் குருதி நுரைத்துப் பொங்கவும்,
இடிந்தவர் வாழ்க்கை எழுச்சிபெற் றுய்யவும்,
புதுமை இலக்கியம் புனைக இளைஞனே!
பொதுமை இலக்கியம் பூக்கட்டும் இன்றே!

-1970
 

94

படிக்கின்றோம்; பேசுகின்றோம்; செய்கின்றோமா?


‘ஒன்றே குலம்’ - என
உரக்கப் படிக்கின்றோம்!
மன்றினில் மேடையில்
வான்பட முழக்குவோம்!
என்றைக் காகிலும்
எவ்விடத் தாகிலும்
நின்(று) அதன் பொருளை
நினைத்திருப் போமா?
படிப்ப தெதற்குத் தம்பி? - கடைப்
பிடிப்பதற்கா? பீற்றுவதற்கா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/175&oldid=1444433" இலிருந்து மீள்விக்கப்பட்டது