பக்கம்:கனிச்சாறு 4.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


மருத்துவம் படிக்கிறோம்;
மனவியல் தேர்கிறோம்;
தெருத்தொறும் ஊர்தொறும்
தீராத நோய்களால்
வருத்த முறுகின்ற
மக்களை வாட்டியே
பருத்த கைகளால்
பணத்தைப் பறிக்கிறோம்!
பதவி எதற்குத் தம்பி? - மக்களுக்
குதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா?

கட்சி அமைக்கிறோம்;
கழகம் சமைக்கிறோம்;
மெச்சுந் தலைவராய்ச்
செயலராய்ப் பொருளராய்
உச்சி குளிர்ந்திட
ஊர்வலம் வருகிறோம்!
எச்செய லாகிலும்
ஏழைக் குதவுமா?
பதவி எதற்குத் தம்பி - மக்களுக்
குதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா?

மேடை அதிர்ந்திட
மின்விளக் கொளியிலே
கூடை கூடையாய்க்
கூப்பாடு போடுவோம்!
ஓடியும் கெஞ்சியும்
ஒப்போலை பெற்றபின்
நாடிய அமைச்சராய்
நாமே வாழ்கிறோம்!
பதவி எதற்குத் தம்பி - மக்களுக்
குதவி செய்யவா? ஊரை உறிஞ்சவா?

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/184&oldid=1444465" இலிருந்து மீள்விக்கப்பட்டது