பக்கம்:கனிச்சாறு 4.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  151


‘வேதியர்’ என்றும், சூத்திரர்’ என்றும்
உயர்வும் இழிவும் பலப்பல உரைத்தனர்! 30
மயர்வற அவற்றை ‘மறை’என எழுதினர்.
‘மறைகள்’ சொன்னதால் ‘மறையோர்’ ஆயினர்!
‘வேதம்’ உரைத்ததால் ‘வேதியர்’ ஆயினர்!
கதைத்த பொய்களைக் கதைகள் ஆக்கினர்.
புதுப்புதுப் புளுகுகள் ‘புராணங்கள்’ ஆயின. 35
அமிழ்ந்தனர் அனைவரும்; அவற்றுள் மயங்கினர்!
தமிழர் உயர்வு வரவரத் தாழ்ந்தது.

இனம்பிள வுண்டதால் ஒற்றுமை இழந்தனர்.
மனமயக் குற்றதால் மானம் இழந்தனர்,
வெள்ளைத் தோலுக்கு அடிமையாய் விழுந்தனர். 40
சள்ளைகள் மிகுந்தன; சண்டைகள் எழுந்தன!
சேரனைச் சோழனும், சோழனை மாறனும்
ஓராது போர்செய்து ஒழித்துக் கட்டினர்!

அறந்தலை உலகில் மறந்தலை நின்றது!
சிறந்த தமிழர் சிதைந்துவே றாயினர். 45
தமிழன் குடுமியைத் தமிழனே உலுக்கினான்;
தமிழன் முதுகில் தமிழனே குத்தினான்!
‘மறையோர்’ அவற்றை ‘மறைந்து’ செய்தனர்.

‘வேதியர்’ அதுவே ‘வேதம்!’ என்றனர்.
அன்று தொடங்கி அடிமுதல் இழிந்தே 50
இன்றைய உலகம் ஏமாற்று உலகமாய்
மிளிர்ந்தது தம்பி! - மேனி எல்லாம்
குளிர்ந்ததா? இல்லை; கொதிப்புற் றதடா!
என்ன நினைக்கிறாய்? - எதிர்கால உலகை
இன்னும் இழித்திட எண்ணுகின் றாயா? 55
அல்லது உயர்த்திட ஆர்வமுற் றாயா?
சொல்; உலகு உனக்குச் சொந்தந் தம்பி!

சாதிக் குப்பையைச் சாம்ப லாக்கு;
பாதியை அறிவுப் பயிருக்கு உரமிடு!
மீதியை ஒற்றுமை மேன்மைக்கு உரமிடு!
இனமும் ஒன்றுதான்; இறையும் ஒன்றுதான்! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/186&oldid=1444468" இலிருந்து மீள்விக்கப்பட்டது