பக்கம்:கனிச்சாறு 4.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  155


பாலுக்குத் தேன் விட்டுப்
பருப்புக்கு நெய் விட்டுக்
காலுக்கு மெத்தைகேட் பீர்கள் - அவன்
கதையினைச் சொத்தையென் பீர்கள்!
படுக்கைக்குப் பாயின்றி, பதுங்கவும் குடிலின்றிக்
கடுக்கின்ற வயிற்றுக்குக் கஞ்சி - கொஞ்சம்
கொடுக்கவே புகழ்ந்துமைக் கெஞ்சி - மிக,
அஞ்சி - குளிர்
நடுக்கிடக் கைபோர்த்து
முடக்கிடும் மெய்சேர்த்து
ஒடுக்கிய வாறுயிர் தீய்ப்பான் - தெரு
ஓரங்களில் உயிர் சாய்ப்பான்!

வினைவிதைத் தானென்றும் விளைவிது தானென்றும்
புனைகதை பற்பல சொல்வீர்! - உயிர்
போனாலும் போகட்டும் என்பீர் - தெற்றித்
தின்பீர் - உம்
மனைமாடு பெரிதென்று
மக்களே உயிரென்று
மனைவிக்குப் பட்டெடுப் பீர்கள்! - அவன்
மண்டை, கல் விட்டுடைப் பீர்கள்!

வாட்டமுற் றிருப்பவர் வாழ்க்கையில் நொந்தவர்
கூட்டமெல் லாம்,ஒன்று சேரும் - நம்
ஈட்டமெல் லாம் எண்ண நேரும் இந்தப்
பாரும் - அதன்
ஊட்ட மும் பொதுவாக்கி
உழைப் பையும் பொதுவாக்கித்
தேட்ட மெல் லாம்வகுத் தீயும் - அந்தத்
தீமைக ளும்அடி சாயும்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/190&oldid=1444473" இலிருந்து மீள்விக்கப்பட்டது