பக்கம்:கனிச்சாறு 4.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  157


105

எதிர்காலந்தனைச் சமைப்பாய் !


பித்தனென் பார் சிலர்;
பேயனென் பார் சிலர்;
பிதற்றுவோன் என்றுரைப்பார்!-பெரும்
எத்தனென் பார்; சிலர்
ஏய்ப்பனென் பார்;உனை
எள்ளல்செய் தே,நகைப்பார்!-தூய
புத்தம் புதுவுணர் வால் அவர் போக்கினைப்
பூழ்க்கையென் றே,தவிர்ப்பாய்!-தம்பி
நித்தமும் இத்தரை
மக்கள் நிமிர்ந்திட
நேர்மைகொண் டே, வுழைப்பாய்!

குறைகளும் கூறுவார்;
குற்றங்கள் சாற்றுவார்;
கோடித் துயர்கொடுப்பார்-தலை
மறைவாகப் பேசுவார்;
மனம் நோக ஏசுவார்;
மக்கள்முன் பல வீசுவார்!-நெஞ்சப்
பொறையோடு நீ யவர்
புரையான போக்கினைப்
புறந்தள்ளி மேலேறுவாய்!-தம்பி
நிறைவான கருத்தினை
நெகிழ்வின்றிக் கூறுவாய்!
நிலையான பயன்விளைப் பாய்!

துணைவரு வார் சிலர்;
தோள்தரு வார் சிலர்;
துவண்டுளம் இடைநெகிழ்வார்!-வினைக்(கு)
அணைபோடு வார் சிலர்;
அகம்வேகு வார் சிலர்;
அடிவீழக் குழிவெட்டு வார்!-எய்த
கணைபோலும் பார்வையால்
கவண்போலும் சொல்லினால்
கலங்காமல் வினைசெய்குவாய்!-தம்பி
இணையற்ற தொண்டுசெய்!
ஏறுபோல் பீடுகொள்!
எதிர்காலந் தனைச் சமைப்பாய்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/192&oldid=1444476" இலிருந்து மீள்விக்கப்பட்டது