பக்கம்:கனிச்சாறு 4.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  159


107

தெய்வமும் உண்மைகொல்!


உலகும் பொறுக்குமோ! உலகும் பொறுக்குமோ!
நிலத்துளி ஆளுமோர் நெஞ்சச் செருக்குடன்
யாகியா கான்-எனும் மாகய வாளி
கூகையும் குருவியும் போல், பொது மக்களைச்
சுட்டுப் பொசுக்கியும் சூறை யாடியும், 5
மொட்டையும் பூவையும்
பிஞ்சையும் சிதைத்தல் போல்,
கட்டிளங் கன்னியர் கற்பைக் குடித்தும்,
குழவிகள் இளையவர்
குருதியை உறிஞ்சியும்,
கிழவரும் அறிஞரும் எனப்பாராமல்,
கோடிக் கோடியாய்க் கூட்டங் கூட்டமாய் 10
ஓடிப் பிடித்தும் உயிரொடு கொளுத்தியும்,
வேட்டம் ஆடிடும் வெறிமையும் பேய்மையும்
காட்டுத் தீயினுங்
கடுமையாய்க் கொடுமையாய்
வீறிடக் கண்டும், வெடித்து விழுங்காமல்,
உலகும் பொறுக்குமோ! உலகும் பொறுக்குமோ! 15

அரசும் இருக்குமோ! அரசும் இருக்குமோ!
கரிசெலாம் சேர்ந்துரு வாயஓர் களிமகன்
மனம்போன வாறெல்லாம் மக்களைத்-தம்முடை
இனமென்றும் உயிரென்றும்
எண்ணாது, இராப்பகல்,
என்றும் இலாதுபோல்-இனியும் இராதுபோல் 20
கொன்று குவிக்குமோர் கொலையிற் கொடுஞ் செயல்-
கண்ட பின்னரும், காதுகள் புண்படக்
கேட்ட பின்னரும் கிளர்ச்சியுற் றெழாமல்-
‘நில்லடா’ எனுமோர் வல்லொலி கொடாமல்
கல்லென இருந்து, காணியாள் கின்ற,பே- 25
ரரசும் இருக்குமோ! அரசும் இருக்குமோ!

மக்களும் இருப்பரோ! மக்களும் இருப்பரோ!
பொக்கெலாம் இ ணைந்துரு வானஓர் புல்லியன்
அரசுத் தலைவனென் றமைந்(து)-ஒரு சிறுநிலத்(து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/194&oldid=1444479" இலிருந்து மீள்விக்கப்பட்டது