பக்கம்:கனிச்சாறு 4.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172  கனிச்சாறு – நான்காம் தொகுதி


115

மறந்துவிடாதே!


உன்றன் குடும்பம், உன்றன் வாழ்க்கை,
உன்றன் நலன்கள், உன்றன் வளங்கள்-
என்று மட்டும் நீ ஒதுங்கி
இருந்து விடாதே!-நீ
இறந்த பின்னும் உலகம் இருக்கும்
மறந்து விடாதே!

உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

சொந்தம் பேசிச் சொந்தம் வாழ,
சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க
இந்த மட்டும் வாழ்ந்து போக
எண்ணி விடாதே!-நீ
இருந்து சென்ற கதையை மறக்கப்
பண்ணி விடாதே!

உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

அன்னை நிலமும் அன்னை மொழியும்
அனைத்து மக்களும் வாழ நினைக்கும்
உன்னை உலகம் மறப்பதில்லை;
ஒதுங்கி விடாதே!-நீ
உழைக்கும் உழைப்பில் உலகம் செழிக்கும்
பதுங்கி விடாதே!

உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/207&oldid=1444510" இலிருந்து மீள்விக்கப்பட்டது