பக்கம்:கனிச்சாறு 4.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  173


116

வறுமை ஒழிந்ததா ? செயலில் காட்டுவோம்!


எண்ணருங் கோடிப் புதுமைகள் செய்தார்;
இலக்கியம் பற்பல கோடி வரைந்தார்!
விண்ணெழுந் தளாவிக் கோள்களை யளந்தார்;
வேற்றுல கங்களைக் காணத் துடித்தார்!
பண்ணெழுந் திசைத்துத் தாளங்கள் சேரப்
பற்பல கலைகளில் ஆடித் திளைத்தார்!
மண்ணெழுந் துயிர்த்தே ஏழையாய் மாளும்
மாந்தனும் உயர்ந்திட யாதுசெய் தாரே? 1

வானுயர் மாளிகை, கோபுர வாயில்,
வளாகப் பொழில்மனை, குளிநீர்க் குளங்கள்
கானல் அறைகள், கடற்கரைச் சோலை,
கண்ணைக் கருத்தை மயக்கிடுங் காட்சி,
தேனவிழ் பூங்கா, திரைப்படக் கூத்தெனத்
தேடா நலன்கள் ஆயிரஞ்செய்தார்;
ஊனிலா உடம்பில் எலும்புகள் தைக்க
உலாவிடும் மக்களுக் கென்னசெய் தாரே? 2

முத்தும் பவழமும் யாத்தபொன் னகைகள்;
முகத்திலும் கழுத்திலும் நறுமணப் பொடிகள்!
புத்தம் புதியவாய்ப் பொலிந்திடும் உடைகள்,
போய்வரும் ஊர்திகள்-யாவையும் செய்தார்;
தொத்தும் குழந்தைகள்-தோலுரு வங்களைத்
தூக்கிய தாய்களா கூடுக ளா-வெனச்
செத்தும் பிழைத்தும் வாழலும் இன்றிச்
சீரழி கின்றவர்க் கேதுசெய் தாரே? 3

சட்டமும் திட்டமும் பற்பல செய்தார்;
சாலைகள் சோலைகள் ஆலைகள் செய்தார்!
கட்டிய அணைகளால் நீரையும் வளைத்தார்;
கழனிகள் ஆயிரம் விளைந்திடச் செய்தார்!
கிட்டிய பற்களும் கிடத்திய உடலுமாய்க்
கீழ்மைத் தெருவில் குளிரினில் தூங்கி,
ஒட்டிய வயிற்றோ டுலாவரு கின்ற
உயிர்வாழ் கூடுகள் வாழஎன் செய்தார்? 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/208&oldid=1444511" இலிருந்து மீள்விக்கப்பட்டது