பக்கம்:கனிச்சாறு 4.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174  கனிச்சாறு – நான்காம் தொகுதி


பாலிலும் தேனிலும் பழச்சுளை கலந்து
பனிக்குழை யிட்டுப் பசியிலா தருந்திக்
காலிலும் கையிலும் மண்படா துலவும்
கயமை மாந்தர் கைதொழற் கென்று,
மாலையும் சிவனையும் தேரினில் ஏற்றி
மத்தளங் கொட்டி விழாப்பல செய்தார்!
சேலையும் வேட்டியும் வானமாய் நிற்கும்
சில்லறை உயிர்கள் வாழஎன் செய்தார்? 5

திருப்பதி பழனி குருவா யூரெனத்
திரைப்பட நடிகரும் நடிகையும் வாங்கும்
கருப்பண உண்டியல் கொட்டி யளக்கும்
கணக்கிலாக் கோயில்கள் பற்பல வெடுத்தே,
உருப்பசி அரம்பையர் மேனகை என்ன
உலாவரும் பெண்டிரைக் குலாவிடச் செய்தார்!
தெருப்படி யோரம் இராப்பகல் வீழ்ந்து
தீப்பசி தின்றிடும் அவர்க்கெது செய்தார்? 6

கணக்கிலாக் கட்சியும் தலைவரும் தோன்றிக்
காலையும் மாலையும் கூக்குர லிட்டார்!
பணக்குவை மாலைகள் பொன்னிழை ஆடை
பளபளத் திடவும் உலாப்பல வந்தார்!
உணக்கிடுங் கருவா டாய்த்தெரு வோரம்
உலர்ந்திடும் வயிறுகள் வாய்களும் காயப்
பிணக்குவி யல்போல் புழுதியிற் புரளும்
பீற்றல் உடைகளுக் கென்னலம் செய்தார்? 7

பொத்தகங் கோடி எழுதிக் குவித்தோம்;
புன்மைக் காட்சிகள் படங்களாய் எடுத்தோம்!
மெத்தவும் நாடகம், திரைப்படம், மேடை,
மேன்மை வானொலி யாவிலும் “வறுமை
செத்தது; வளமை செழித்த” தென் றேபல
சிந்துகள் இசைத்தோம்; கதைகளும் வடித்தோம்!
கத்தலில் காட்சிகள் மறைவது மில்லை;
கைகளால் செய்து காட்டுவோம் வாரீர்! 8

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/209&oldid=1444513" இலிருந்து மீள்விக்கப்பட்டது