இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
180 ☐ கனிச்சாறு - நான்காம் தொகுதி
121
இன்றை உலகம் புரட்சி உலகம்!
இன்றை உலகம் புரட்சி உலகம்!
எழுக விடிவை நோக்கியே!
குன்றை இடிக்கும் ஆற்றல் மறவர்
கொள்கைக் கொடியைத் தூக்கியே!
இன்றை இளைஞர் புதுமை வீரர்!
எழுக துயிலை நீக்கியே!
ஒன்றை நினைக, உரிமை வெல்க,
உணர்வை நெஞ்சில் தேக்கியே!
நீண்ட நெடிய அடிமைத் தன்மை
நிலவும் நிலையைப் போக்கவே,
மூண்ட உரிமைக் கனலை உணர்க!
முனைக, விளைவை ஊக்கவே!
வாட்டும் வறுமை, ஆட்சிக் கொடுமை,
வாழ்க்கை நலிவில் நடப்பதோ?
கேட்டும் பார்த்தும் கிளர்ச்சி யின்றிக்
கீழ்மை யுற்றுக் கிடப்பதோ?
பொங்கும் வளமை! பொலிக பொதுமை!
பூக்கும் உரிமை விரைவிலே!
எங்கும் புதுமை! எவரும் சமன்மை!
எதுவும் இல்லை மறைவிலே!
-1984