பக்கம்:கனிச்சாறு 4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190  கனிச்சாறு – நான்காம் தொகுதி


நல்லவை என்றும் நலத்தையே கொடுக்கும்!
நன்மையே அவற்றால் விளையும்!
அல்லவை என்றும் துன்பமே அளிக்கும்!
அழிவையும் இழிவையும் சேர்க்கும்!

பொருளினை விரும்பிப் புன்மைசெய் யாதே!
பொய்தரும் பொருள் பொய் யாகும்!
இருளினை விரும்பி ஒளி வெறுப் பாரோ?
என்றுமே மெய்ம்மையே மெய்யாம்!

-1988
 

132

வாழ்க்கைக் கூறுகள்!


பொருளியலால் முன்னேறப்
பாடுபடல் பிழையன்று;
பொருளியலே வாழ்க்கை யன்று!

இருள்தீர்க்கும் நல்லறிவும்
எண்ணத்தூய் மைச்செயலும்
எப்பொழுதும் வாழ்வில் வேண்டும்!

மருள்சேர்க்கும் உளந்தவிர்த்து
மடிசேர்க்கும் வளம்ஒதுக்கி
மாளாத உழைப்பும் வேண்டும்!

அருள்உளமும் ஒளியறிவும்
ஆக்கஞ்சேர் நற்பண்பும்
அமைந்ததே வாழ்க்கை ஆகும்!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/225&oldid=1444540" இலிருந்து மீள்விக்கப்பட்டது