பக்கம்:கனிச்சாறு 4.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212  கனிச்சாறு – நான்காம் தொகுதி


153

வலிய ஓர் இயக்கம் செய்வோம் – அதன்
வளர்ச்சிக்குக் கைகொடுப்போம்!


வாருங்கள் தமிழர்களே!
வாழ்வைச் சமைத்திட,
தாழ்வை அகற்றிட,
வழி ஒன்று கண்டிடுவோம்! - நம்
இழிவுகள் போக்கிடுவோம்!

வாருங்கள் அறிஞர்களே! - நம்
வண்தமிழ் காத்திட,
செந்தமிழ் போற்றிட,
வகையினை ஆய்ந்திடுவோம்! - அதை
வையம் பரப்பிடுவோம்!

வாருங்கள் தோழர்களே! - கொடும்
வறுமை இலாதொரு
பொதுமை அமைப்பினை
வடித்திட நாம் இணைவோம்! - புதுக்
குடித்தனம் நாம் அமைப்போம்!

வாருங்கள் இளைஞர்களே! - நல்ல
வாய்மையும் நேர்மையும்
தூய்மையும் அரசியல்
வரம்பொன்று கூவிடுவோம்! - அதைத்
திறங்கொண்டு கட்டமைப்போம்!

வாருங்கள் தாய்க்குலத்தீர்! - தீய
வன்மையும் கொடுமையும்
புன்மையும் அற்றொரு
வளமை இனம் படைப்போம்! - அதற்
கிளமை மனம் கொடுப்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/247&oldid=1444628" இலிருந்து மீள்விக்கப்பட்டது