பக்கம்:கனிச்சாறு 4.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216  கனிச்சாறு – நான்காம் தொகுதி


156

வந்து பொருந்துக !


உண்மையர் நேர்மையர் ஊக்க உழைப்பினர்
திண்மையர் ஒழுங்கினர் தீந்தமிழ் நெஞ்சினர்
அண்மையர் சேய்மையர் ஆக்கம் கருதுவர்
ஒண்மையர் யாவரும் உடன்வந் திணைகவே!

தொண்டு கருதிடும் தூய உளத்தினர்
மண்டு காதலால் மணித்தமிழ் பேணுநர்
விண்டு விளக்கிடும் வீறுகொள் அறிவினர்
கண்டு தொடங்கிடும் கழகத் திணைகவே!

பொதுமை பேணிடும் பூந்தமிழ் நெஞ்சினர்
புதுமை வேண்டிடும் பொய்யறு காட்சியர்
முதுமை இளமையர் முரிபடாக் கொள்கையர்
இதுமெய் அணியென எண்ணி இணைகவே!

வாழ்வழி வையத்து வாழும் நினைவினர்
சூழ்வழி சூழ்ந்துளம் சுழிபடா நோக்கினர்
பாழ்வழி பலகண்டு பதைக்கும் உயிரினர்
வீழ்வழி ஈதென் விரைந்துவந் திணைகவே!

துளியொடுந் துளியெனத் தோளொடுந் தோளென
ஒளியொடும் ஒளியென உயிர்ப்பொடும் உயிர்ப்பென
வளியொடும் வளியென வார்ந்த வலிவென
தெளிவொடுந் துணிவொடும் தேர்ந்துவந் திணைகவே!
நந்தமிழ் காக்கவும் நம்மினம் மீட்கவும்
செந்தமிழ் நாட்டினைச் சீருறப் பேணவும்
முந்து தமிழின் முன்னேற்றக் கழகத்து
வந்து பொருந்துக! வாய்மையின் உழைக்கவே!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/251&oldid=1444634" இலிருந்து மீள்விக்கப்பட்டது