பக்கம்:கனிச்சாறு 4.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  217


157

உலகப் பேரியக்கம் இங்கே உருவாதல் காண்பீர் !


உயர்ந்தபணி தொடங்கிடுவோம்! உயிர்முயற்சி செய்வோம்!
ஒப்பற்ற தமிழினத்தை ஓரணிசெய் துய்வோம்!
அயர்ந்தஇனம், தளர்ந்தமனம், அடிமைநிலை நீக்கி,
ஆக்கவழி நடப்பதெனில் அருஞ்செயலும் அன்றோ!
பெயர்ந்தநிலம் யாதெனினும் பெறுநிலையென் னெனினும்
பெருந்தமிழால் ஒன்றிணைவோம்! பெருமைபெற வாழ்வோம்!
மயர்ந்தமனம், தயங்குநிலை, மாசுதவழ் எண்ணம்
மாய்ந்தொழிந்து போகட்டும்! மறுமலர்ச்சி திண்ணம்!

பேரன்பு கொண்டவரே! பெரியோரே! எம்மைப்
பெற்றதமிழ்த் தாய்மாரே! பெறாதஉடன் பிறப்பீர்!
ஈரந்தோய் நெஞ்சினராய் இறைஞ்சுகின்றோம், உம்மை!
இன்றிணைதல் இல்லையெனில் என்றுமினி இல்லை.
சாரம்போய் மணமும்போய்ச் சக்கையராய் நிற்போம்!
‘சகுனி’குணம் போகவில்லை; சழக்ககல வில்லை!
காரம்போய்ப் பயனென்ன? கடைநிலைக்குத் தாழ்ந்தோம்!
காத்திடுவீர் இனநலத்தைக் காலத்தால் இன்றே!

நாளுக்கொரு கட்சியினில் நாம்நழுவி வாழ்ந்தோம்!
நலன்துளியும் விளையவில்லை; நடுக்கடலில் வீழ்ந்தோம்!
ஆளுக்கொரு பாத்திகட்டி அதில்விளைவு செய்தோம்!
அரைவிளைவு கால்விளைவே! அளந்ததெலாம் சோர்வே!
சூளுக்கொரு குறைவில்லை; சுழற்றுகிறோம் பேச்சை!
சொன்னதென்ன? சொல்வதென்ன? யாரளந்து சொல்வார்?
தோளுக்கொரு துணைதேடித் துணைதேடிச் சோர்ந்தோம்!
தொட்டபணி விட்டபணி! தோல்விகளே எச்சம்!

சேரன்பேர் சோழன்பேர் பாண்டியன்பேர் சிலம்பிச்
செருக்குரையும் நெருப்புரையும் செய்தனதான் என்ன?
நேரம்போய் எண்ணுவதில் நீள்பயனும் உண்டோ?
நெடுங்காலம் கடத்திவிட்டோம்! நிலைத்தவிளை வென்ன?
வீரம்பொய், அன்பும்பொய், விருந்தும்பொய், நம்மின்
வென்றவர லாறும்பொய், விளைவும்பொய் - என்றால்
ஓரம்போய் நில்லுங்கள்! ஒதுங்குங்கள்! நாளை
உலகப்பே ரியக்கமிங்கே உருவாதல் காண்பீர்!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/252&oldid=1444635" இலிருந்து மீள்விக்கப்பட்டது