பக்கம்:கனிச்சாறு 4.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உரு


111. மாடமாளிகையில் எத்துணை ஏந்துகளோடு வாழ்கிறார்கள் அங்கே! ஏழைகள் வாழ்வை எண்ணிப் பார்க்கவும் முடிவதில்லை. நிலைமை இப்படியாகவேவா இருந்துவிடப் போகிறது? அந்த மாளிகைகளுக்குள் ஏழைகள் வலிந்து புகுகின்ற ஒருநாள் வரத்தான் போகிறது என்ற எண்ணம்.

112. பெரிய மாந்தர்கள் நடுவில் வெளிப்படையாக இத்துணை இழிவான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலைகள் எல்லாம் தீருகின்ற நாளொன்று வருமா என்று ஏங்குகிறது உள்ளம்.

113. நிலையாமையை எளிய முறையில் உணர்த்துகின்றன இப்பாடலின் அடிகள்!

114. பாவலர்கள் அழகை, இயற்கையைப் பாடுவதைவிட ஏழ்மையைப் போக்கப் பாடவேண்டும் என்று விடுத்த வேண்டுகோள். வெங்காலூர்த் தமிழ்ச் சங்க ஆண்டு மலரில் வந்தது.

115. உனக்குமட்டும் நீ உழைத்தால் உலகம் உன்னை நினைப்பதில்லை என்னும் அழுத்தமான பொதுக் கருத்தை வலியுறுத்திப் பேசுகிறது.

116. அறிவியல் புதுமைகள் பல தோன்றியுள்ளன. ஆனால் வாழ்க்கை நிலைகள் இருந்தபடிதாமே இருக்கின்றன! உண்மைநிலைகளை எண்ணிப் பார்த்து உரைத்தது இப்பாடல்.

117. தம்மை மறந்து உலக மக்களுக்கு உழைப்பவரையே தெய்வம் என்கிறது இப்பாட்டு.

118. 1975-இல் தமிழகத்தில் மழை கரந்து வறட்சி மிகுந்த காலத்துப் பொதுத் தொண்டர்களும் மதத் தலைவர்களும் ஆங்காங்கே மக்களைத் திரட்டி மழை வேண்டல்கள் நிகழ்த்தியதைக் கண்டு மனம்நொந்து வருந்திப் பாடியது.

119. மேலுமில்லை கீழுமில்லை என்கிற பொதுமை வரத் திரளட்டும் மக்கள் குலம் என அழைக்கிறது இப்பாடல்.

120. மே நாள் தொழிலாளர் ஒன்றுபடும் நன்னாள். அத்தொழிலாளர் எழுச்சியில் நிலமெலாம் புரட்சியால் பொங்கிடும், மேல், கீழ் எனும் வேற்றுமைகள் அகன்றிடும் என்று தொழிலாளர் எழுச்சியின் மேன்மை குறித்து விளக்குகிறார் பாவலரேறு. இப்பாடல் ‘தமிழ்நிலம்’ இதழில் வெளிவந்தது.

121. தேசிய விடுதலை எழுச்சிகள் பரவலாக முகிழ்த்த சூழலில் எழுந்ததிப்பாடல். பொங்கும் வளமை! பொலிக பொதுமை! பூக்கும் உரிமை விரைவிலே என்று உறுதியுடன் கூறுகிறார் பாவலரேறு.

122. உழைக்கும் மக்களும், உழவரும் தொழிலரும் ஒன்றிணைந்து மழைக்கும் வெயிலுக்கும் மலைத்திடாது விடுதலைக்கு ஆர்ப்பரித்து எழுந்திடல் வேண்டும் என அழைக்கிறார் பாவலரேறு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/26&oldid=1444669" இலிருந்து மீள்விக்கப்பட்டது