பக்கம்:கனிச்சாறு 4.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬

கனிச்சாறு நான்காம் தொகுதி


123. ஆறறிவு இனம் மக்களினம் என்கிறோம். ஏற்றத்தாழ்வெனும் இழிநிலை இதில்தான் உள்ளது. படித்தவர் எவரும் இதுகுறித்து வெட்கப்படவில்லை . ஏட்டில் எழுதுவோர் எழுந்து போராடினால் இருநிலை மாய்ந்திடும் என்ற இடித்துரைக்கிறார் பாவலரேறு.

124. இன்னலாய் வாழும் ஏழையர்க் கெல்லாம் விடிவு வாய்க்க புரட்சி செய் தம்பி கனல்போல! - என்று ஊற்றம் தருகிறார் பாவலரேறு.

125. இயற்கை அன்னை தந்த பெரிய அறிதல் ஆற்றலைக் கோணல் மாணலாய் வீணாய்ப் பண்ணியே வீழ்வது சரியா? எண்ணிப்பார் - என்று வினா எழுப்புகிறார் பாவலரேறு.

126. இவ்வுலகில் வந்துயிர்த்து வாழும் பெருமை எண்ணியும் அப் பெருமைக்கான பெருஞ்செயல் செய்ய எண்ணியும் பேரண்ட வீதியில் ஆடுக ஊஞ்சல் - என்று விரிந்த உணர்வை ஊட்டுகிறார் பாவலரேறு. (இத் தலைப்பின் கீழ் - ஏற்கனவே பாடல்கள் ‘குஞ்சுகளுக்கு’ப் பகுதியிலும் சிறுவர்களுக்குப் பகுதியிலும் வந்துள்ளது. அவை இப்பாடலுக்கு முன்பு எழுதப் பெற்றவை)

127. உடலையும், உள்ளத்தையும் முறையாய்ப் பேணுவதும், பயிற்றுவிப்பதுமே அறம் பொருள் இன்பம் எனப் போற்றுவோம் - என்கிறார் பாவலரேறு.

128. ஊர்மக்கள் நலன் கருதி எந்தத் தவறுகளையும் தட்டிக்கேட்கப் பழகிடவும், தம் கருத்தை எந்த இடர்வரினும் உரைத்திடவும் தம்பியைப் பழக்குகிறார் பாவலரேறு.

129. பெண்ணாய்ப் பிறந்தால் குழந்தை முதலேயே பெருஞ்சுமை தாங்கிடும் அவல நிலையை விளக்குகிறார் பாவலரேறு.

130. சுற்றுச் சூழலை வெற்றி கொள்வாய்! சுற்றுச் சூழலுக்கு அடிமைப்படாது வெற்றி கொள்ளுதலே கடமை - அதுவே அறிவூக்கம் என்றுரைக்கிறார் பாவலரேறு.

131. இருளினை விரும்பி ஒளியினை வெறுப்பவருண்டா? பொருளினை விரும்பாதே. அது பொய்மையாகும். என்று அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

132. ஒளியறிவும், நற்பண்புமே வாழ்க்கை என்று அவ் வாழ்வின் கூறுகளைக் குறிப்பிடுகிறது இப்பாடல்.

133. வையம் புதுமைசெய்! வருந்தடைகள் உடை! பொய்யைத் தகர்த்தெறி! பொலிந்திடும் பொதுமையே தமிழ்ச் சிட்டுகளுக்குப் பொதுமை உணர்வூட்டுகிறது பாடல்.

134. உழைப்பில்லாமல் உணவில்லாமல் ஒருவரும் இருத்தல் கூடாது! பிழைப்பெல்லார்க்கும் பொது என இருந்தால் பிழையே எதனிலும் நேராது! சிறுவர்க்கு எளிமையாய் உணர்த்துகிறது இப்பாடல்.

135. சாதியும், மதமும், பொருளியலும் மக்களைக் கூறுபடுத்துவது சரியோ? மக்களைச் சமம் எனச்செய்வோம் எனத் தமிழ்ச்சிட்டுத் தம்பிகளை அழைக்கிறார் பாவலரேறு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/27&oldid=1444673" இலிருந்து மீள்விக்கப்பட்டது