பக்கம்:கனிச்சாறு 4.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

கடவுள் நம்பிக்கை!

காற்றுலவாக் குடியிருப்பால் கண்கள் காணாக்
குற்றுயிரின் பெருவிளைவால் குருதி பீய்ச்சும்
ஊற்றியங்கா வகையாலோ வந்த நோய்க்கே,
ஒட்டாத கடவுள்மேல் கோள்கள் தம்மேல்,
ஏற்றுகின்றார் காரணத்தை அறியாதார்கள்;
ஈதொன்றும் வியப்பில்லை! மருந்து நூற்கள்,
தேற்றமுடன் கற்றார்அறி வியலைக் கற்றார்,
தெய்வத்தைக் காட்டுகின்றார் வெட்கம்! வெட்கம்!!

அருந்துகின்ற உணவுகளின் வகையால், தீமை
ஆக்குகின்ற குடிவகையால், ஒழுங்கின் மையால்,
வருந்துகின்ற நோக்காட்டைப் போக்கு தற்கு
வகைவகையாய்த் தெய்வங்கள், வணங்கு கின்றார்
தெரிந்துணரா மக்கள்; இதில் வியப்பொன் றில்லை!
தேர்ந்தநூல் பலகற்றும், உயிர்நூல் கற்றும்,
மருந்தறிந்த பெரியோரும் படையல் பூசை
மனமாரச் செய்கின்றார் வெட்கம்! வெட்கம்!!

கருக்கொள்ளா மகளிர்க்குக் குற்றஞ் சாற்றிக்
கல்நின்ற பிள்ளையார் அரசு சுற்றி,
எருக்கிலையால், எட்டியினால் தீத்தெய் வங்கள்
ஏற்றத்தை உடுக்கைதட்டி இறங்கச் செய்து,
தெருக்கடையில் ஓட்டிவிடும் மடமைப் போக்கைத்
தெரியாதார் செய்கின்றார் வியப்பொன்றில்லை!
பெருக்குநூல் பலகற்றும் உடல்நூல், பால்நூல்
படித்துணர்ந்தும் செய்கின்றார் வெட்கம்! வெட்கம்!!

பெயரளவை, கோட்பொருத்தம், நாட்பொருத்தம்,
பெண்ணுக்கும் ஆணுக்கும் பார்த்துத் தீர்த்து
மயிரளவும் குறைகாணா வகையிற் செய்த
மணம் நடந்தே ஓராண்டில் கணவன் மாய்ந்தால்,
உயிரளவும் பெண்சுமக்கும் பேச்சும் ஏச்சும்
ஒன்றிரண்டா நாள்வைத்த குருவுக் கென்ன?
மயர்வின்றிக் கற்றுணர்ந்த பெரியோர் செய்தால்,
மடமையெல்லாம் அறிவாமோ? தீமை நன்றோ?

-1951
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/38&oldid=1440195" இலிருந்து மீள்விக்கப்பட்டது