பக்கம்:கனிச்சாறு 4.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 11


விற்பன வெல்லாம் நூல்களென் றாகா;
விளைவினில் பதரில தாமோ?
கற்பன வெல்லாம் கல்வியென் றாகா;
காண்பவை புரையில தாமோ?
நிற்பன வெல்லாம் புகழென் றாகா;
நிறத்தால் எட்டி, இன் கனியோ?
பற்பல புதுமை பாரிலுண் டெனினும்
பண்புடைக் கல்வியே புகழாம்!

-1960


8

இளைஞர் எழுச்சி !


செந்தமிழ் வயலில், செந்தமிழ்ப் பயிரில்
சேரும் களைகள் எல்லாம்,
இந்தியென் றொன்றாம்; வடமொழி ஒன்றாம்!
இவைநம் நெஞ்சின் முள்ளாம்!

தமிழர் வாழ்வைத், தமிழர் வனப்பைத்
தாவிக் கடித்திடும் நாயாம்!
தமிழர் நாட்டில் அவற்றின் வளர்ச்சி
தணிப்பறி யாப்பெருந் தீயாம்!

இவற்றை எண்ணுக; ஏற்றவை செய்க!
எந்தமிழ் இளைஞரின் உள்ளம்!
கவின்செயப் புகுந்தால் நம்மவர் படைகள்
கரையுடைப் பெடுத்த வெள்ளம்!

தனித்தமிழ் ஆக்கம், தமிழ்நெஞ் சூக்கம்
தமிழர்க் கிக்கால் வேண்டும்
முனித்தெழ மக்களை, இளைஞர் எல்லாம்
தூண்டுக தூண்டுக யாண்டும்!

புதுமை எழுதுக; புதுமை பேசுக;
புன்மைச் செயல்களைப் போக்க!
கதைகள் நிறுத்துக; கனன்றுளம் பொங்குக!
கனித்தமிழ் மொழியினைக் காக்க.

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/46&oldid=1440462" இலிருந்து மீள்விக்கப்பட்டது