பக்கம்:கனிச்சாறு 4.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 17


அந்நிலைக்கோ உள்ளம் அறிவோ டிணைந்துயர்ந்து,
செந்நிலையைப் பற்றிச் செருக்குநிலை தாமழிந்து,
பற்றற்று நின்று பரந்துயரப் பாரின்கண்
உற்ற உயிரெல்லாம் ஒன்றென் றுணர்வுபெறல்
வேண்டும்! அதற்கிந்த நீணிலத்தின் சான்றோர்கள்
தூண்டும் வழியில் துவளா தெழல்வேண்டும்.

அந்த நிலைக்கே அடிநிலையிங் கேதென்றால்
சொந்த நிலத்தடிமை முன்னர் தொலைப்பதுவே!
சொந்தநிலம் என்ப தெதுவென்னில் சொல்பவற்றை
அந்த மொழியில் அறிவார்முன் வாழ்ந்தநிலம்! 80
இங்ஙன் மொழிவழியே இவ்வுலகம் நின்றிடிலோ
எங்ஙன் ‘உலகரசென்’ றிங்கியம்பல் சாலுமெனின்,
தம்நலத்தைக் காப்பார் பிறர்நலமும் தாங்காப்பார்!
தம்நலத்தைக் காவார் பிறர்நலத்தைக் காப்பமென்றல்
கண்ணறையன் கண்ணறைக்குக் காட்டுவது போலாகும்!
பெண்ணையோர் பெண்ணுக்குப்
                                             பேசிமணஞ் செய்வதொக்கும்!
தன்னைத்தான் பேணிப்பின் தற்கொண்டார்ப் பேணி, யதன்
பின்னைத்தான் தேயம் அதன்பின்இப் பேருலகம்
என்ற படிமுறையில் அல்லால் இருநொடிக்குள்
மன்ற உலகரசு மன்னிவிடல் சாலாது! 90
தம்நிலத்தைக் காப்பார் பிறர்நிலமும் காவாரோ?
தம்நிலத்தைக் காப்பதென்னின்
                                             தாய்மொழியைக் காத்திடுக!
நந்தாய் மொழிநலத்தை நாமெடுத்துக் கூறலென்னின்
இந்தவுரை போதா(து); எழுதுந்தாள் காணாதே!
ஒன்றென்று தோன்றி இரண்டாய் உயர்ந்தோங்கி
மன்றிருந்து மூன்றாக மூவர் மடியிருந்து
நாலறமா விண்டுயர்ந்தே ஐந்தாய்த் திணைவிரிந்தே
ஆலகலம் பல்கிப்பா வாறாகி ஏழிசையாய்
எட்டுச் சுவைவிரித்தே, ஒன்பான் தனித்தன்மை[1]
பெற்றுப் பெறுவார்க்குப் [2]பத்துப் பயன்நல்கும் 100
எந்தமிழைக் காவார் எவரோ அவர் தமிழ்த்தாய்
தந்தையர்க்கே தாம்பிறவார்; ஆக, தவறிழைப்பார்!


  1. 1. ஒன்பான் தனித்தன்மை: தாய்மை, தூய்மை, கன்னிமை, முன்மை, நுண்மை, திண்மை, ஒண்மை, அகன்மை, செம்மை,
  2. 2. பத்துப் பயன்: அறிவு, அறம், அன்பு, அடக்கம், ஒழுக்கம், நட்பு, செல்வம், மெய்யுணர்வு, இன்பம், புகழ்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/52&oldid=1440474" இலிருந்து மீள்விக்கப்பட்டது