பக்கம்:கனிச்சாறு 4.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 25


இனிவரும் உலகம் எல்லார்க் கும்பொது!
தனியொரு மாந்த உடைமை தவறு!

பொதுநல உலகம் பூத்தது தம்பி!
புதுமைத் தமிழன் நீயடா தம்பி!

தமிழ்மொழி உன்னைத் தமிழன்ஆக் கட்டும்!
இமிழ்கடல் உலகில் பொதுமை என்பது
தமிழன் கண்ட தலைமைக் கொள்கை!
அமிழாக் கொள்கை அரிமாக் கொள்கை! 70
சிமிழ்க்காது இதனை உலகோர்க்குச் சொல்லு!
தமிழால் உலகத் தலைமை தாங்கு!

செயலால் உயர்ந்தது மேனாடு என்றால்
வயங்கிடும் உளத்தால் உயர்ந்ததுன் நாடு!

அவர்மொழி கண்டதோ அறிவியல் என்றால்
தமிழ்மொழி கண்டது மெய்யறி வென்றுரை!

அறிவியல் உடல்எனின் மெய்யறிவு உள்ளம்!
குறித்துவை இதனையும்! யாவர்க்கும் கூறிடு!

உயிர்களுக்கு உடலின் வளர்ச்சி போதாது!
உயிர்களை உயர்த்துதல் உள்ளம் தம்பி! 80

உள்ளம் தாழ்ந்த உண்மையால் அன்றோ
கள்ளமும், கவடும், கயமையும் பிறந்தன.
ஏழ்மையும் கீழ்மையும் மக்களுள் தோன்றின!
தாழ்மையும் சேர்ந்தது! மாந்தரும் தாழ்ந்தனர்.

எனவே தம்பி! இதனைக் கேள்நீ:
கனவே அன்று; கற்பனை அன்று!
தமிழக் கொள்கையைத் தரையெலாம் ஊன்று!
அமிழும் உலகைக் காப்பதும் அதுதான்!
புதுமையும் அதுதான் பொதுமையும் அதுதான்!
பதியவை நெஞ்சில்! உணர்வில்! உயிரிலே! 90

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/60&oldid=1440486" இலிருந்து மீள்விக்கப்பட்டது