பக்கம்:கனிச்சாறு 4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 கனிச்சாறு – நான்காம் தொகுதி


இம்மண் உருண்டையுள் இருக்கின்ற நாமோ
அந்நுண் அணுவினும் அணுவாம் என உணர்!
இத்துணை அணுப்போல் இருந்து கொண்டுதான்
எத்தனைச் செருக்காய் இருக்கின்றோம், தெரியுமோ?

நமக்குள அறிவே பெரிதென் கின்றோம்!
நமக்குத் தெரிந்ததே சிறந்ததென் கின்றோம்!
நாம் உரைப் பதையே நல்லுரை என்று
வீம்புரை பேசி வீணரா கின்றோம்!
நம்கண் காண்பதே காட்சி என்றும்
நம்செவி கேட்பதே கேள்வி என்றும்
பித்துரை பேசிப் பிதற்றித் திரிகின்றோம்!
செத்துத் தொலையுமுன் செய்ததும் சொன்னதும்
கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தால்
ஈட்டம் என்பதோ இழிவும் பொய்யும்
கள்ளமும் குள்ளமும் கயமையும் அன்றிக்
கொள்ளச் சிறந்தது கோழி முட்டையே!
என்ன, தம்பி! விழிக்கின் றாய், நீ!
சொன்ன யாவும் உண்மையா, இல்லையா?

தம்பி! நம்மிடம் மாந்தத் தன்மை
இம்மி அளவே னும்இருக்கின்றதா?
அண்டையில் உள்ளவன் அயலில் வாழ்பவன்
உண்டானா? குடித்தானா? உடுத்தானா? என்று
கவலைப் படுகின் றோமா? இல்லையே!
(கவலை இலானைக் கயவன் என்று
வள்ளுவப் பெருந்தகை வாய்விட்டு உரைத்தார்)

ஒருவரைப் போலவே யாவரும் பிறப்பவர்!
ஒருவரைப் போலவே யாவரும் இறப்பவர்!

இருப்பினும் இந்த மக்களுக் கிடையில்
பெருமைப் படும்படி பேசஒன் றுண்டா?

யாவரும் ஓரினம் எனும்நினை விருந்ததா?
யாவரும் மாந்தரே எனநினைந் தனரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/63&oldid=1440496" இலிருந்து மீள்விக்கப்பட்டது