பக்கம்:கனிச்சாறு 4.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 35


20

அயர்வைக் கொல்லடா ! தோளை உயர்த்தடா !


உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே,
கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே! 1

உறவு பகைத்ததா? உதறித் தள்ளடா!
ஊரும் வெறுத்ததா? எதிர்த்து நில்லடா!
துறவுப் போக்கிலே, தூயர் துணையிலே
துணிவைக் காட்டடா, கொள்கைப் புணையிலே! 2

வறுமை உற்றதா? பசியைக் கொல்லடா!
வாழ்க்கை கசந்ததா? துயரை வெல்லடா!
பொறுமை கொள்ளடா, புல்லர் உரையிலே!
பூட்கை சாற்றடா வெற்றிக் கரையிலே! 3

சூழ்ச்சி மிகுந்ததா? உரையில் விழுத்தடா!
சூடு பறக்கநின் உணர்வில் கொளுத்தடா!
தாழ்ச்சி செய்யுமுன் பகைவர்க் கிடையிலே,
தமிழை நினையடா, வேங்கை நடையிலே! 4

பொய்மை நிறைந்ததா, வெடித்துச் சிரியடா!
பூண்ட வெற்றிகள் சரிக்குச் சரியடா!
மெய்மை ஒளிர்வதே பொய்ம்மை இருளிலே!
மேட்டைக் காண்பதே பள்ளச் சரிவிலே! 5

புகழ்ச்சி மொழிகளோ தூசென் றெண்ணடா!
புனைவுச் சொற்களோ புழுதி மண்ணடா!
இகழ்ச்சி நெரித்ததா? சோர்வைப் புதையடா!
ஏசு புத்தரும் உணர்ந்த கதையடா! 6

வினைக்குத் தனியனோ? வெற்றி நினக்கடா!
விரகு, சூழ்ச்சிகள் துண்டு துணுக்கடா!
நனைக்கும் பனி, மழை, நறுக்கும் வெப்பமோ,
நலிவைத் தருமெனில் தொண்டுக் கொப்புமோ? 7

ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா!
உண்மைப் பயிரிலும் ஊழ்க்கும் களையடா!
அற்றைப் புகழெலாம் இற்றை உயிர்ப்படா!
அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா! 8

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/70&oldid=1440507" இலிருந்து மீள்விக்கப்பட்டது