பக்கம்:கனிச்சாறு 4.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 கனிச்சாறு – நான்காம் தொகுதி


21

உனை அழிக்கும் எல்லை !

படித்து, அறிவு பெற்றாலென்ன?
பளபளப்பாய் வாழ்ந்தாலென்ன?
பிடித்ததடா ‘நாகரிகப்’ பேய்தான் - உள்ளம்
பிறழ்ந்ததடா இனிமேல் குட்டிச் சுவர்தான்!

உடுத்தும்எழில் கண்டாலென்ன?
உண்டுறக்கம் கொண்டாலென்ன?
அடுத்ததடா சீரழிவு பார்க்கே - வழி
ஆனதடா அனைத்துலகப் போர்க்கே!

அறிவியலால் என்னபயன்?
அரசியலால் ஏதுநலன்?
செறிவிழந்து போனதடா வாழ்வில் - உளம்
சீர்குலைந்து வீழ்ந்ததடா தாழ்வில்!

கலைவளர்ச்சி என்னாகும்?
காட்சிநலன் என்னதரும்?
புலைவளர்ச்சி மிகுந்ததடா தம்பி - நெஞ்சு
புண்ணாகிப் போனதடா வெம்பி!

மயிர்ப்புனைவால் யார்க்குப்பயன்?
மழமழப்பால் யார்க்குநலன்?
உயிர்ப்புனைவும் சாம்பிற்றடா தம்பி - நாடு
உடற்புனைவை ஓம்பிற்றடா நம்பி!

நூலுணர்வால் கண்டதென்ன?
நோட்டமிட்டுப் பெற்றதென்ன?
பாலுணர்வில் தோய்ந்ததடா நெஞ்சம் - இனிப்
பாரினிலே மாந்தர்க்கெது மிஞ்சும்!

எட்டுத்திக்கும் ஆண்டாலென்ன?
எழுநிலமும் வென்றாலென்ன?
தட்டுக்கெட்டுப் போயிற்றடா வாழ்க்கை! - நல்ல
தரமிழந்து வீழ்ந்தனை, நீ பூழ்க்கை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/71&oldid=1440508" இலிருந்து மீள்விக்கப்பட்டது