பக்கம்:கனிச்சாறு 4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 கனிச்சாறு – நான்காம் தொகுதி


கொட்டிக் கிடந்தன அங்கே! - அந்தக்
குவியலைப் பொன்னன் பலமுறை நன்றாய்த்
தட்டிக்கொட் டிப்பதம் பார்த்தான் - பின்
தலையசைத்தான்; எழுந்தான்; நடை யிட்டான்!

சென்றவ னைக்கடைக் காரன் “தம்பி
செல்வதேன்? உனக்கென்ன வேண்டுவ” தென்றான்;
“ஒன்றுமில்லை; எங்கள் வீட்டில் - உள்ள
ஓர்எரு மை,கன்று போட்டுள்ள தந்தக்

கன்றுக் கொருபெயர் வேண்டும் - இந்தக்
கடையினில் அதற்கொரு பொத்தகம் உண்டா?
என்றுநான் பார்த்திட வந்தேன் - இங்
கில்லாமை யால்போகின் றேன்” என்று போனான்.

மெய்யாக வே,கடைக் காரன் - அந்த
மேலான(!) நூலில்லாத் தன்மைக்கு நாணிப்
பொய்யாய் ஓர் அஞ்சல் வரைந்தே - அன்றே
போட்டனன் சென்னைக்குக் கீழ்வரு மாறு;

“பொத்தகம் அச்சிடுவோரே! இங்குப்
புதுமுறை யாய்ஒரு பொத்தகம் தன்னை
எத்தனையோ மக்கள் கேட்டார் – நூல்
இல்லைஎன் றுரைப்பது நம்குறை யன்றோ?

ஆகவே நாலைந்து நாளில் – ஓர்
அணிற்பிள்ளை முதலாகப் புலிக்குட்டி வரைக்கும்
நாகரி கப்பெயர் சூட்ட – ஒரு
நானூறு பக்கத்தில் பொத்தகம் வேண்டும்!”


என்று பறந்ததே அஞ்சல்!,சென்ற
இரண்டொரு நாளில்பல் லாயிரம் நூற்கள்
குன்றாய்க் குவிந்தன! மக்கள்,பெருங்
கூட்டமாய்ச் சென்றதை வாங்கிச் சுவைத்தார்!

நன்று; நன்று; நாக ரிகம்! - மக்கள்
நாட்டங்கள் வாட்டங்கள் மிகமிக நன்று!
என்றைக்கு மக்கள் எல்லாரும் உயர்
வெண்ணித் திருந்துவ ரோ? உயர் வாரோ?

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/73&oldid=1440511" இலிருந்து மீள்விக்கப்பட்டது