பக்கம்:கனிச்சாறு 4.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 39


23

போலியரைக் கண்டுகொள் தம்பி !


போலிகள் வாழ்கின்ற காலமிது - தம்பி
புன்மை செறிந்துள்ள காலமிது!
பாலிலும் பாகிலும் வெண்ணெயிலும் - சரி
பாதிக் கலப்புள்ள காலமிது!

திருடரே நல்லவர் போல்நடிப்பார்! - கொடுந்
தீயவர் ஊமையர் போன்றிருப்பார்!
உருவிலும் பேச்சிலும் அன்னவரைக் - கண்டே
உள்ளந் தெளிதல் மிகக்கடினம்!

பார்க்கத் துறவியைப் போலிருப்பார் - உள்ளப்
பான்மையில் கீழ்மையின் காலிருப்பார்;
யாருக்கும் மேல்எனப் பேசிடுவார் - ஆனால்
யாவர்க்கும் முன்வரக் கூசிடுவார்.

உள்ளம் பரந்து, விரிந்ததென்பார் - சிறு
ஓட்டை கண் டாலதைக் கோட்டையென்பார்!
கள்ள நினைவினர்! நல்விளைவை - என்றும்
கண்டு பொறாத மனத்தினரே!

திருக்குறட் பாக்கள் முழக்கிடுவார் - நன்மை
தீமைகள் ஆய்ந்து வழக்கிடுவார்!
செருக்குற யாங்களே மெய்யர் என்பார் - பொருள்
சேர்ப்பதி லேவிழிப் பாயிருப்பார்!

பொன்மணி பகட்டுடை தாமணிவார் -ஒரு
பூழ்க்கையும் பிறர்க்கிட வேட்கை கொளார்!
மின்மினி போன்ற ஒளியுடையார் - உயர்
மெய்யறி வேமெனும் வெளிறுடையார்!

கடமையில் தாழோம்யாம் என்றுரைப்பார் - நடுக்
கடலில் மிதக்கையில் கைநெரிப்பார்!
உடைமை யெலாம்பொது வேண்டுமென்பார் - ஓர்
ஓட்டைப் பொருளையும் வீட்டடைப்பார்!
வாய்மையர் யாமென நம்பவைப்பார் - பல
வாழ்க்கை நிகழ்ச்சிகள் தாமறைப்பார்!
தூய்மையர் போலப் பிதற்றிடுவார் - அவர்
தோதுகள் கண்டுளந் தெளிக தம்பி!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/74&oldid=1440512" இலிருந்து மீள்விக்கப்பட்டது