பக்கம்:கனிச்சாறு 4.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 கனிச்சாறு – நான்காம் தொகுதி


24

சிற்றூர் !


நெருக்கம் குறைந்த குடில்கள், மனைகள்,
நீண்ட மரங்கள் நிறைந்த ஊர்!
தெருக்கள் குறைவு; இரைச்சல் இல்லை;
தென்றல் தவழும் சிறிய ஊர்!

சாலை தோறும் அடர்ந்த மரங்கள்
சந்த னத்தின் நிழல்தரும்!
ஓலைக் குடில்கள் வெப்பந் தாங்கி
உள்ளங் குளிரச் செய்திடும்!

காற்றும் மலையும், வயல்கள் எங்கும்
கண் குளிர்ந்த பசுமையும்,
ஏற்றப் பாட்டும் எருதின் ஒலியும்
எங்கும் மகிழ்வைப் பொசிந்திடும்!

ஏரி, குளங்கள், வயல்கள் எங்கும்
இனிய நன்னீர் தேங்குமாம்!
கார் முகில்கள் குன்று தோறும்
கவிந்து படுத்துத் தூங்குமாம்!

கழனி எங்கும் கரும்புத் தோட்டம்;
கதிர் விளைந்து சாயுமாம்!
உழவர் பாடல் காற்றில் மிதந்தே
ஊர்க்குள் வந்து பாயுமாம்!

மடைகள் தோறும் மீன்கள் துள்ளும்;
மண்டும் நாரைக் கூட்டங்கள்!
அடைகள் போலும் தேனீக் கூடு!
ஆல விழுதின் ஊஞ்சல்கள்!

புத்தம் புதிய கறிகள், காய்கள்!
பூ மணக்கும் சோலைகள்!
கத்துங் குயில்கள்; கிளிகள் நிறைந்து
கனிகள் கோதுங் காட்சிகள்!

தூய்மைக் காற்று! தூய்மைச் சூழல்!
தொத்து நோய்கள் இலாத ஊர்!
வாய்மை நெஞ்சம் சார்ந்த மக்கள்!
வாழ்க்கை மணக்கும் சிறிய ஊர்!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/75&oldid=1440513" இலிருந்து மீள்விக்கப்பட்டது