பக்கம்:கனிச்சாறு 4.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 47


29

மனத்தில், அறிவில் ஒளி ஏற்றுவாய் !


நின்ற இடத்திலேயே
நின்றுகொண் டிராதே!
நெடிய உலகத்தைச்
சென்றுபார்! - உன்
குடியை யமர்த்தியங்கு
வாழ்ந்து பார்! - பல
குன்றுண்டு; மலையுண்டு;
காடுண்டு; கடலுண்டு;
குனிந்து, நிமிர்ந்து, நடந்
தோடுவாய்! - உயிர்க்
குலங்கள் வாழ்கவெனப்
பாடுவாய்!

சென்ற தடத்திலேயே
சென்றுகொண் டிராதே!
சேற்றில் சகதியினில்
நடந்துபார்! - முள்
சிரிக்கும் கரும்புதருள்
நுழைந்துபார்! பெருஞ்
சிறப்புண்டு; இழிவுண்டு;
சிதைவுண்டு; புதைவுண்டு;
சிரித்தும் அழுதும், உயிர்
தேம்புவாய்! - துயர்
சுவைத்திவ் வுலகநலம்
ஓம்புவாய்!

தின்ற பொருள்களையே
தின்றுகொண் டிராதே!
தெவிட்டும் பொருள்களையும்
உண்டுபார்! - உன்
தீனிப் பைக்கும், கசப்
பீந்துபார்! - இலை
தழையுண்டு; பிஞ்சுண்டு;
காயுண்டு; கனியுண்டு!
திளைத்துச் சுவைத்து, உனைத்
தேற்றுவாய்! - மனந்
தெளிய அறிவில், ஒளி
ஏற்றுவாய்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/82&oldid=1440701" இலிருந்து மீள்விக்கப்பட்டது