பக்கம்:கனிச்சாறு 4.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 கனிச்சாறு – நான்காம் தொகுதி


32

நிறையக் கேள்; குறையப் பேசு!


நிறையக் கேள்;
குறையப் பேசு;
நீள நினை;
தாழ நட, என்றும் - துன்பம்
நேர்வ தில்லை;
தொல்லைகளும் குன்றும்!

நிறையப் படி
குறைத் தெழுது;
நெஞ்சில் அன்பு
கொஞ்ச உறவாடு! - துயர்
நேரு மெனில்
செந்தமிழால் பாடு!

நாக்கில் ஒரு
கோடித் துன்பம்
நடையில் ஒரு
கோடித் துன்பம், ஒன்றாய் - வந்து
தாக்கும்; அவை
தவிர்க்கில் உனை வென்றாய்!

உன்ற னுக்கு
முன்னும் பின்னும்
உலக முண்டாம்
என்ப தெண்ணி வாழ்வாய் - செய்யும்
நன்றிருக்கும்!
தீது செய்யின் தாழ்வாய்!

வன்மை உடல்,
மென்மை நெஞ்சம்,
வாய்மை உரை,
தூய்மை நடை வேண்டும் - தம்பி
நன்மை வரும்;
நலமும் வரும், யாண்டும்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/85&oldid=1440706" இலிருந்து மீள்விக்கப்பட்டது