பக்கம்:கனிச்சாறு 4.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 51


33

கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமா ?


கல்விக் கழகத்துக் கணக்காயர்க் கெல்லாம்
சொல்லிக் கொள்ளுவேன் சொலல்வல் லவரே!
இற்றைக் காலத்துத் தளிர்விடும் இளையரைப்
பிற்கா லத்துப் பெருங்குடி மக்களாய்ச்
செய்ய வல்ல சீரிய பணியில்
மெய்யாய் உழைக்கும் மேன்மை யோரே!

பெற்றோர் யாவரும் பிள்ளைக ளைத்தம்
உற்றார் எனநினைத் தும்மிடம் விடுத்தே
அவர்தம் கல்வியும் அறிவும் உள்ளமும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாய் 10
வளர்ந்து வருமென வைத்த நம்பிக்கை
தளர்ந்து விடாமல் காக்குந் தகைமையீர்!

மக்களும் நாடும் மற்றிவ் வுலகமும்
தக்கவா றியங்கிடத் தவங்கிடந் துழலும்
வாய்மை நெஞ்சினேன் உங்களை வணங்கித்
தூய்மை விளைவு தொடங்கிடக் கூறுவேன்!

குணக்குன் றனையீர்! நீவிர் கொளத்தரும்
கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமோ?

அறிவியல் நுட்பமும் ஆய்வியல் முடிபும்
செறிவுறுங் கல்விச் சிறப்பெனில் ஒப்புமோ? 20

மண்ணியல் வளப்பமும் மாற்றமும் பருவமும்
விண்ணியல் விளக்கமும் வெளிக்கோள் உலாக்களும்
இற்றை மாணவர்க் கேற்ற கல்வியென்
றுற்ற முடிபாய் உரைத்திடல் தக்கதோ?

கற்றுணர்ந் தடங்கிய சொற்றவச் சான்றீர்!
உற்ற கல்வியின் உட்பொருள் கேண்மினோ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/86&oldid=1440708" இலிருந்து மீள்விக்கப்பட்டது