பக்கம்:கனிச்சாறு 5.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


74  அழிவு!

புழுவைக் கொல்ல பூச்சி!
பூச்சியைக் கொல்ல பாச்சை!
பாச்சையைக் கொல்ல பல்லி !
பல்லியைக் கொல்ல தேரை!
தேரையைக் கொல்ல பாம்பு!
பாம்பைக் கொல்ல கீரி!
கீரியைக் கொல்ல நரி!
நரியைக் கொல்ல ஓநாய்!
ஓநாயைக் கொல்ல கரடி!
கரடியைக் கொல்ல புலி!
புலியைக் 'கொல்ல யானை!
யானையைக் கொல்ல அரிமா!
அரியைக் கொல்ல மாந்தன்
மாந்தனைக் கொல்லும் எல்லாம்! -1960


75  காரணம்!

தவ்வித் தவ்விப் போவதால்
'தவளை' என்று சொல்கிறோம்!
வௌவிக் கிளையைப் பிடித்தலால்
‘வௌவால்' என்று சொல்கிறோம்!

குதித்துக் குதித்துச் செல்வதால்
'குதிரை' என்று சொல்கிறோம்!
தத்திச் செல்லும் கிளியினைத்
'தத்தை' என்று அழைக்கிறோம்!

வெட்ட வெட்ட வாழ்வதால்
'வாழை' என்று கூறுவோம்!
கட்டிச் செய்த சுவர்களைக்
'கட்டிடம்' என்றியம் பிடுவோம்! -1960

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/100&oldid=1424904" இலிருந்து மீள்விக்கப்பட்டது