பக்கம்:கனிச்சாறு 5.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


79

சிற்றெறும்பு!


பையன்:சிற்றெறும்பே! சிற்றெறும்பே!
செல்வதெங்கே சொல்லுவாய்?

சிற்றெறும்பு:புற்றை நோக்கிப் போகிறோம்;
பொழுது வீழப் போவதால்!

பையன்:பற்றிக்கொண்டு செல்வதென்ன?
பாடுபட்ட செல்வமோ?

சிற்றெறும்பு:குற்றி வைத்த அரிசி மாவின்
குறுநொய் கொஞ்சம் கிடைத்ததே!

பையன்:கூட்டி வைக்கும் செல்வம் யாவும்
கொட்டிக் காப்ப தெங்கேயோ?

சிற்றெறும்பு:வீட்டை யொன்று கட்டி வைத்து
வேலி போட்ட புற்றிலே!

பையன்:மேட்டின் மீது புற்றை நீங்கள்
கட்டி வைத்த தென்னவோ?

சிற்றெறும்பு:ஈட்டி வைத்த கூலம் யாவும்
ஈரஞ் சேரா திருக்கவே!

பையன்:ஒன்று பின்னை ஒன்றாய்ப் போகும்
ஒழுக்கம் கற்ற தெங்ஙனம்?

சிற்றெறும்பு:நன்று கேட்டாய்! எவ்வுயிர்க்கும்
நல்லொழுங்கே வாழ்க்கையாம்!

பையன்:குன்று போலக் குவித்த செல்வம்
கூடி யுண்ப தெங்ஙனம்?

சிற்றெறும்பு:ஒன்று வாழ்வு! யாவும் வாழ
உண்டு செல்வம் உலகிலே!

பையன்:சேர்த்து யாவும் கூடியுண்டால்,
செல்வம் தீர்ந்து போகுமே?

சிற்றெறும்பு:தீர்ந்து போகில் யாவுங் கூடி
ஊர்ந்து சென்று சேர்ப்பமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/104&oldid=1445008" இலிருந்து மீள்விக்கப்பட்டது