பக்கம்:கனிச்சாறு 5.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  77


85  பழகிக்கொள்!

விடியலில் எழநீ பழகிக் கொள்,
விளங்காப் பாடங் கற்றுக் கொள்,
மடியினை நீக்கப் பழகிக்கொள்,
மதித்து நடப்பதைக் கற்றுக்கொள்!

படித்ததை நினைக்கப் பழகிக்கொள்,
பணிவொடு பேசக் கற்றுக் கொள்!
துடித்தெதை யுஞ் செய ஒண்ணாதே!
துன்ப மிழைக்க எண்ணாதே!

பொய்சொல நெஞ்சில் நினையாதே;
பொறுமையை இழக்க விழையாதே!
ஐயம் வருங்கால் தீர்க்க முனை!
அதனை வளர்த்தல் தொல்லை வினை!

அன்னை, தந்தை, பெரியோர்கள்,
ஆரெவர் சொற்கும் கீழ்ப்படிய,
உன்னைப் பழக்கிக் கொண்டாலே,
உன்போற் சிறுவர் நடப்பாரே!

சினத்தை அடக்கப் பழகிக் கொள்,
சிரிப்பதை என்றும் மறவாதே!
பணத்தைப் பெரியதாய் எண்ணாமல்
பண்பினை எண்ணக் கற்றுக்கொள்!

அச்சம் உன்னை மாய்த்து விடும்,
அயலார் அஞ்சவும் செய்யாதே!
வஞ்சனை செய்ய எண்ணாதே;
வாயா டுதலை நினைக்காதே!

மற்றவர் தொழிலைப் பழிக்காதே!
மண்மேல் எவரும் ஓரினமே!
கற்றவர் பேச்சைக் கேட்க விழை!
கல்லார் பேச்சைத் தள்ள முனை!

பழகிக் கொள் நீ! பழகிக் கொள்,
பாட்டும் கூத்தும், ஓவியமும்!
பழகிக் கொள் நீ! பழகிக் கொள்!
படிக்கவும் ஆடவும் பழகிக் கொள்!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/111&oldid=1424435" இலிருந்து மீள்விக்கப்பட்டது