பக்கம்:கனிச்சாறு 5.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


86  மலர்

செடியில், கொடியில்
மரத்தில் பூப்பாய்
மலரே! மலரே! மலரே! - உன்
சிரிப்பில் உள்ளம்
மகிழா தவர்கள்
இலரே! இலரே! இலரே!

விடியற் காலை
வீதிகள் எங்கும்
மணமே! மணமே! மணமே! - நீ
வீசு கின்றாய்!
என்னே உன்றன்
குணமே! குணமே! குணமே!

புவியில் உன்னைப்!
போற்றி மகிழ்ந்தார்!
பூவே! பூவே! பூவே! - உன்னைப்
புலவர் யாரும்
பாடி மகிழ்ந்தார்
பாவே! பாவே! பாவே!

குவியல் குவிய
லாகப் பூத்தாய்,
கோடி! கோடி! கோடி! - உன்னைக்
குலவிக் கொஞ்சத்
தும்பிகள் வருமே
நாடி! நாடி! நாடி!

வெள்ளை, மஞ்சள்
நீலம், சிவப்பு
வண்ணம்! வண்ணம்! வண்ணம்! - உன்னை
விரும்பிச் சூடாப்
பெண்கள் இல்லை;
திண்ணம்! திண்ணம் திண்ணம்!

பிள்ளைகள் முதலாப்
பெரியோர் வரையில்
உன்னை, உன்னை, உன்னை என்றும்
பேணி மகிழ்வார்!
பறிக்கச் செய்தாய்
என்னை! என்னை! என்னை!

-1966
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/112&oldid=1424436" இலிருந்து மீள்விக்கப்பட்டது