பக்கம்:கனிச்சாறு 5.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


வள்ளுவரின் அறப் பால்குடித்தாள் - ஒலி
வார்க்கும் சிலம்பினைக் காலணிந்தாள் -எழில்
துள்ளுந் தமிழ்மணி மேகலையை மின்னல்
தோன்றிடும் தன்னிடை நூலணிந்தாள்

மண்டலப் பேரர சாண்டவளாம் - இந்த
மண்ணெலாந் தம்புகழ் நீண்டவளாம் - சுடர்க்
குண்டலச் செவியினள்! வளையொலி கையினள்!
கூத்திசை நல்லயல் பூண்டவளாம்!

சொல்லுக்குச் சொல் வெல்லக் கட்டியடி, அதில்
தோய்ந்திடும் நூல்கள்தேன் தொட்டியடி! - பொருள்
வெல்லப் பயின்றவர் தம்மினுக்கே - அதில்
வீறும் அறிவு பொன் பெட்டியடி!

பொய்யகற்றும்; உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் - உயிர்
மெய்புகட்டும்; அற மேன்மைகிட்டும்; இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!

கன்னியரே! கும்மி கொட்டுங்கடி - இது
கன்னித் தமிழ் எனக் கொட்டுங்கடி! - இங்கு
முன்னர் பிறந்ததும் பின்னர் சிறப்பதும்
முத்தமிழே என்று கொட்டுங்கடி!

சேயிழையீர்! கும்மி கொட்டுங்கடி - இது
செந்தமிழே எனக் கொட்டுங்கடி - நறும்
பாயிழை யோடுஞ்சொல் பல்கோடி கொண்டது
பைந்தமிழே எனக் கொட்டுங்கடி!

ஏந்திழையீர்! கும்மி கொட்டுங்கடி - என்றும்
இருந்தமிழே எனக் கொட்டுங்கடி; - உல
கேந்துபண் பாட்டினை ஏற்பதும் சேர்ப்பதும்
இளந்தமிழே என்று கொட்டுங்கடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/118&oldid=1424930" இலிருந்து மீள்விக்கப்பட்டது