பக்கம்:கனிச்சாறு 5.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


இயற்கைப் பொத்தகம் இறைவன் வரைந்தது!
இல்லத்து வாயிற்கு இடுகின்றோம் கதவு!
கல்வி வானிற்குக் கதவேது தம்பி?

அடித்துக் கொண்டே இருக்கும் காற்றுப் போல்
படித்துக் கொண்டே இருக்கும் உள்ளம்!
வெள்ளப் பெருக்குப் போல் அறிவுப் பெருக்கு!
உள்ளம் என்பதோ இமையிலா ஒளிவிழி!
மூடுதல் இல்லா உள்ளத்து விழிகள்
ஏடு ஏடாக இயற்கையைப் படிக்கும்
பள்ளிக் கூடம், இப் பரந்த உலகம்!
கல்வி என்பதோ மக்களின் வாழ்க்கை!
செயற்கைப் பள்ளிக்கு விடுமுறை உண்டு!
இயற்கைப் பள்ளிக்கு விடுமுறை இல்லை!

காலையும் மாலையும் கதிரவன் காணலாம்!
சோலையில் ஆற்றில் ஊர்ந்து திரியலாம்!
பட்டுப் பூச்சிபோல் மின்னிப் பறக்கலாம்!
சிட்டுக் குருவிபோல் வானை அளாவலாம்!
கடலுள் மூழ்கலாம்! மலைமேல் ஏறலாம்!
உடல் அயர்ந் தாலும் உளம் அய ராது!

படிப்பு; படிப்பு; அயர்விலாப் படிப்பு!
துடிக்கும் உலகத்திற்கு ஓய்வேது தம்பி!
விழிகளைத் திறந்துவை! செவிகளை நீட்டு!
வழியில் கிடைக்கும் அறிவெலாம் வாரிஉண்!
மனத்தை மூடாதே! அறிவெனும் சிறகால்
மனத்தைத் தூக்கி வானெலாம் திரிந்துவா!
நிலவுக்குப் போய்வா! விண்மீன்கள் எண்ணு!
உலகத் தரைமேல் உருண்டு புரண்டுவா!
வெண்முகில் படுக்கை எப்படித் தெரியுமா?
பஞ்சுப் படுக்கை தோற்றது போயேன்!

வெயிலில் காய்ந்த சருகென உலர்வாய்!
புயலில் மழையில் புழுதியாய் நனைவாய்!
அடடா தம்பி அயர்வில் லாத
இயற்கையின் படிப்பை என்னென்று சொல்வேன்?

பள்ளிக்குத் தாழ்ப்பாள் உண்டு!
கல்விக்குத் தாழ்ப்பாள் இல்லை! கண்மணியே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/121&oldid=1424939" இலிருந்து மீள்விக்கப்பட்டது