பக்கம்:கனிச்சாறு 5.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  101


வாடை நெஞ்சிற்கு வருத்திடாத் தீந் தழல்!
வாழ்க்கை வெயிற்கது குளிர்நிழல்!
இசைக்குழல்;
மேல் எழல்
ஒண் கழல்!

கூடை நினைவுகள் கொட்டிய கொப்பரை!
கூடாச் செயற்கது தப்பறை!
காவல் செப்பறை!
உயிர் துப்பறை;
குளிர் வெப்பறை!

-1969


102  நிலவில் மாந்தர்!

மாந்தர் மூவர் பறந்தனர்;
வானம் நோக்கிச் சென்றனர்
காந்தப் பரப்பைக் கடந்தனர்;
கவின் நிலாவில் குதித்தனர்!

வியப்பு! வியப்பு!! வியப்படா!!!
வெண்ணி லாவின் கதையடா!
அயர்வி லாத முயற்சிகள்!
அறிவு கண்ட வெற்றிகள்!

எண்ணற் கரிய உடுக்களும்
எல்லையற்ற வானமும்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தன!
கண்டு பிடிக்கத் தூண்டின!

வருந்தி வருந்தி உழைத்தனர்!
வானை அளக்க முனைந்தனர்!
பொருந்தி வந்த அறிவியல்
போட்ட கணக்கும் வென்றதே!

மக்கள் வாழும் உலகம்போல்
மற்ற உலகம் தேடினர்!
தக்க வாறு நிலவினைத்
தாவிக் கண்டு மீண்டனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/135&oldid=1425744" இலிருந்து மீள்விக்கப்பட்டது