பக்கம்:கனிச்சாறு 5.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  105


104  கலைஞர்கள்!

சிற்பிகள்:

கருங்கல் லாலும்
களிமண் ணாலும்
கற்பனை யோடெழில் பாவை - பல
கண்ணுக்கும் கருத்துக்கும் தேவை - இது
கவின்கலைச் சிற்பிகள் பார்வை! - அவர்
கலையுணர் வுள்ளம்,
காட்சியின் வெள்ளம்!
கண்டிட நெஞ்சினை அள்ளும்!

ஓவியர்:

தூரிகை எடுப்பார்!
வண்ணந் தோய்ப்பார்;
சுறுசுறுப் போடே விரைவார் -பல
சித்திர உருவங்கள் வரைவார்! - அதன்
சீரினில் நெஞ்சமும் கரைவார்! - இதன்
சிறப்பினைக் காண்போம்!
செவ்வையைக் காண்போம்!
செறிவுடன் உளத்தால் உண்போம்!

கூத்தர்:

விழியால் விரலால்
விரிபொரு ளுணர்த்தி
வேய்ங்குழல் இசையினுக் காடி - எழில்
விறலியர் தம்முடன் கூடி - கலை
விளைவுகள் எனும்பயன் நாடி - கல்வி
விளையா தார்க்கும்
விளைப்பார் பொருளை
நாடகக் கூத்தர்கள் பாடி!

இசைவாணர்:

குரலால், குழலால்,
முரலும் யாழால்
குடமொடு முழிவால் இசைய -நறுங்
குளிர் தமிழ் உள்ளம் அசைய - அதில்
கூடிடும் இன்பமும் பிசைய - நின்று
கேட்போர் கேட்கக்
கேளார் வேட்கக்
கிளர்ந்திடும் வாணர்கள் இசையே!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/139&oldid=1425746" இலிருந்து மீள்விக்கப்பட்டது