பக்கம்:கனிச்சாறு 5.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


10. பண்பும் ஒன்றே! அதுதான் பழிக்கென
நண்புந் துறக்கும் நயமுடைத் தென்க!

11. குடிமை ஒன்றே! அதுதான் கொள்கையில்
மடிமை சேரா மாணுடைத் தென்க!

12. சால்பும் ஒன்றே! அதுதான் சழக்கெனும்
தோல்வி தழுவிடார் துலக்கம் என்க!

13. அடக்கம் ஒன்றே! அதுதான் அறிவிலர்
கடக்க நினையாக் காழ்ப்புடைத் தென்க!

14. தகைமை ஒன்றே! அதுதான் தாழ்வினும்
முகமை கூறா மொய்ம்புடைத் தென்க!

15. புகழும் ஒன்றே! அதுதான் புரையிலா
திகழும் உயிர்க்கொரு தோற்றம் என்க!

-1960
 

148

நற்பண்புகள்!


கூடி வாழ்தலே அன்பு;
கொடுமை இலாதது பண்பு.
பொய் சொல்லாததே அறம்;
பொறுத்துக் கொள்வது மறம்.
கற்று நடப்பது கல்வி;
கல்விக் கழகு பணிதல்!
ஈயார்க் கீவதே ஈகை;
ஏழ்மையில் செப்பமே வாழ்க்கை!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/184&oldid=1444960" இலிருந்து மீள்விக்கப்பட்டது