பக்கம்:கனிச்சாறு 5.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


168

அனைத்திலும் உயர்ந்தது!


எத்தனை அணுக்கள்
இருக்கின் றனவோ,
அத்தனை நோய்கள்
மாந்தனுக் குண்டு!
அத்தனை நோயினும்
அழியா திருப்பது,
வித்தினைப் போன்ற
அவனுடை உள்ளமே!

எத்தனை நினைவுகள்
இயங்குகின் றனவோ,
அத்தனை விளைவுகள்
மாந்தனால் முடியும்!
அத்தனை விளைவிலும்
அருமைய(து), அவனால்
எத்தனைப் பேர், பயன்
எய்தினார் என்பதே!

-1985


169

உணர்வு, சொல், செயல், பயன்!


உள்ளத்தில் உணர்வாய்த் தோன்றி,
உருப்பெற்று வடிவம் எய்தி,
விள்ளருஞ் சொற்க ளாலே
வெளிப்பட்டுச் சூழல் சேர்ந்தே
எள்ளலும் இழிவும் இல்லா
எழிலுடன் செயலு மாகிக்
கொள்ளுமிவ் வுலகோர்க் கின்பம்
கொடுப்பதே பயன்என் போமே!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/196&oldid=1444973" இலிருந்து மீள்விக்கப்பட்டது