பக்கம்:கனிச்சாறு 6.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


52

ஒரு காதல் கதை!


அவள் விரும்பி மணந்துகொண்டாள், அவனை! என்றும்
அளவில்லா அன்புணர்வைச் சொரிவான் என்றே
அவள் விரும்பிக் கனவு கண்டாள்; நம்பிப் போனாள்!
அனைவர்க்கும் பெருமையுடன் உரைத்தும் வந்தாள்!
‘இவள் பெருமைக் களவில்லை; உண்மை!’ என்றே
எல்லோரும் நினைத்திருந்தார்! ஆனால் இன்று
துவள்கின்ற நிழல்போல வாழ்க்கை செய்வாள்!
துரும்பானாள் உடலில்;உளம் இரும்பா னாளே!

கற்றவர்தாம் எனவுரைத்தாள்; பெருமைப் பட்டாள்!
கடுகளவும் பொய்யில்லா நெஞ்சம் வாய்க்கப்
பெற்றவர் தாம் என வியந்தாள்! மகிழ்ச்சி கொண்டாள்!
பிழையற்ற நல்லுணர்வால் தன்மேல் காதல்
உற்றவர்தாம் எனநினைந்தாள்! ‘இருக்கும்’ என்றே
உறவினர் நினைத்திருந்தார்; ஆனால் இன்று
பற்றவிழ்ந்த துறவியைப்போல் பேசு கின்றாள்!
பாழ்ங் கண்ணீர் நிற்கவில்லை; வடிக்கின் றாளே!

மதிக்கின்றார் என்னையவர்; மலர்போல் பொன்போல்
மாட்சிபெறப் போற்றுகின்றார்; நாளும் அன்பைப்
பதிக்கின்றார்! ஏழ்மைநிலை எனினும் உள்ளப்
பான்மையினால் வாழ்கின்றோம் என்றாள் அன்று!
கொதிக்கின்ற துள்ளமெல்லாம்! அன்பால் மூன்று
குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்! அவளைக் காலில்
மிதிக்கின்ற காட்சியினை அயலார் சொன்னார்!
மேற்கொண்டு செயலறியா துழல்கின் றாளே!

‘இலக்கியங்கள் யாக்கின்றார்; தமிழ்சொல் கின்றார்;
எத்தனையோ மாணவர்க்குப் பயிற்று கின்றார்;
கலக்கமுறல் வேண்டாம்;எம் வறுமை போகும்;
காசுபணம் வரத்தொடங்கும்; அக்கால் என்னைத்
துலக்குமுறச் செய்திடுவார்’ எனமற் றார்க்குத்
துணிவுரைத்தாள்; கனிவுரைத்தாள்; தொடர்ந்து வாழ்ந்தாள்!
நலக்குறைவே என்றாலும் மருந்தால் தீரும்;
நல்லவுளம் தாழ்ந்ததென்றால் அவளென் செய்வாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/100&oldid=1445196" இலிருந்து மீள்விக்கப்பட்டது