பக்கம்:கனிச்சாறு 6.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  75

காதலித்த ஒரு தவறோ? காலம் செய்த
கடுமைமிகு கோலமதோ? கணவன் நெஞ்சம்
பேதலித்த நிலையிதுவோ? என்ன செய்வாள்?
பெருந்துயரைச் சுமக்கின்றாள்! பெற்றோர் கண்டால்
நோதலுற்ற புண்ணெஞ்சம் பொன்னாய் மாற்றி
நொய்ந்துவரும் புன்னகையைப் பெய்தல் செய்வாள்!
ஓதலுற்ற அறிவு,கல்வி தொண்(டு) அன் பெல்லாம்
ஒடுங்கிவிட்ட பொய்வாழ்வு வாழ்கின் றாளே!

தமிழ்கற்ற பெரும்பிழையோ? தனித்து வாழ்ந்த
தவறவர்க்கு வந்ததுவோ? தாய்மை நெஞ்சின்
அமிழ்தூற்றை, பெண்மையன்பை விளங்கிக் கொள்ளா
அறியாமை சூழ்ந்ததுவோ? அன்பால் பெற்ற
குமிழ்நகையின் குழந்தைகளும் வெறுப்ப துண்டோ?
கூடியுள்ளார் காரறிவோ? கொடுமை நெஞ்சோ?
இமிழ்கடல்சூழ் தமிழ்நிலத்தின் இலக்கி யங்கள்
இயம்பாத அக, இழிவில் இயங்க லாமோ?

இல்லறத்தைக் கீழ்மைசெய்து வாழந்தார் உண்டோ?
ஏற்றவள்மேல் அழல்வீசித் தணிப்பார் உண்டோ?
வல்லதிறம் பெண்மையிடம் நிறுப்பார் உண்டோ?
வாய்மையுளம் கீழ்மையுற்றால் பேய்மை யன்றோ?
கொல்லவரும் ஆண்மையினால் பெண்மை உய்மோ?
குத்துகளும் அடிகளுந்தாம் வாழ்க்கை யாமோ?
சொல்லுதிர்க்கும் அனற்பேச்சால் உண்மை அன்பைச்
சுட்டெரிப்பார் மனந்திருந்தி வாழு வாரோ?

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/101&oldid=1445197" இலிருந்து மீள்விக்கப்பட்டது